தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல்!

- நேற்றிரவே CID யினர் விசாரணை ஆரம்பிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (19) பாராளுமன்றத்தில் அவர் இதனை அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

தேர்தலை நடாத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்ற மை காரணமாக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சஜித் பிரேமதாஸ இதன்போது குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்றிரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக எழுந்த முறைப்பாடு தொடர்பில் தமக்கு தொலைபேசியின் ஊடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவே இது தொடர்பான விசாரணைகளை CID யினர் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த இருவருக்கும் உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, இது சரியான விடயமா என விசேடமாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸிடம் பிரதம் தினேஷ் குணவர்தன் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...