கட்டட அனுமதிக்கு இலஞ்சம்; மாவனல்லை பிரதேச சபைத் தலைவர் சமந்த ஸ்டீவன் கைது

மாவனல்லையின் பிரதேச சபைத் தலைவர் சமந்த ஸ்டீவன் கைது செய்யப்பட்டுள்ளார்

மாவனல்லை நகரில் உள்ள கட்டடமொன்றின் திட்டவரைபடத்திற்கான அனுமதியை வழங்குவதற்காக ரூ. 20 இலட்சம் இலஞ்சம் பெற்ற  வேளையில் இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனல்லையில் உள்ள வர்த்தக கட்டமொன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினராக மாவனல்லையின் பிரதேச சபைத் தலைவர் சமந்த ஸ்டீவன், மாவனல்லை நகரின் மத்தியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடமொன்றின் மேல் தளத்தில் வைத்து இலஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது சாரதியும் இங்கு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் மாவனல்லை பிரதேச சபையைச் சேர்ந்த மேலும் இருவர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மாவனல்லை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து இவ்வாறு இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சமந்த ஸ்டீவன் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினராக மூன்று தடவைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு கடந்த வருடம் மார்ச் மாதம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அவரை தலைவராக நியமிப்பதற்கு பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் அவருக்கு வாக்குகளிவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.


Add new comment

Or log in with...