மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு ரூ. 3.5 - 3.7 பில்லியன்

- 1,100 ஊழியர்கள் 2023 இல் ஓய்வு; பதில் ஆட்சேர்ப்பு இடம்பெறாது
- ஒக்., நவம்பரில் முறையே ரூ. 33.6, ரூ. 35.6 பில்லியன் வருமானம்
- ஜனவரியில் எரிபொருள், நிலக்கரி கொள்வனவுக்கு ரூ. 35, ரூ. 38.45 பில். அவசியம்

உத்தேச மின்சார கட்டண சீரமைப்புகள், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, இலங்கை மின்சார சபை செலவுகளை நிர்வகித்தல் மற்றும் ஏனைய சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து, இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியாளர்கள் சங்கம், மின்சார கண்காணிப்பாளர்கள் சங்கம், தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட ஏனைய சங்க உறுப்பினர்களுடன் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான மொத்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையே ரூ. 3.5 பில்லியன் முதல் ரூ. 3.7 பில்லியனாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதேவேளை, 1100 இற்கும் அதிக ஊழியர்கள் 2023 இல் ஓய்வு பெற உள்ளதாகவும், இதற்கென புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய கட்டணக் கட்டமைப்பின்படி, ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கை மின்சார சபை மொத்த வருமானம் ரூ. 33.6 பில்லியனாகவும், நவம்பரில் அது ரூ. 35.6 பில்லியனாகவும் அமைந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

 

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின்னுற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அவசியமான HFO, Naptha மற்றும் டீசலை கொள்வனவு செய்ய ரூ. 35 பில்லியன் செலவாகுமெனவும், ஜனவரி மாதத்திற்கான நிலக்கரிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 38.45 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...