- தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் நாளை விசேட கூட்டம்
- எதிர்வரும் வாரம் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்தும் வகையில், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து, அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆம் பிரிவின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர் அல்லது அரசாங்கக அதிபரை தெரிவத்தாட்சி அலுவலராகவும், அந்தந்த மாவட்டங்களின் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் அல்லது உதவித் தேர்தல்கள் ஆணையாளரை உதவித் தெரிவத்தாட்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எஸ்.பீ. திவாரத்ன, எம்.எம். மொஹமட, கே.பீ.பீ. பத்திரண, பீ.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் கையொப்பத்துடன் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்களுக்கும் (தெரிவத்தாட்சி அலுவலர்கள்), பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் (உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள்), தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இப்பேச்சுவார்த்தை நாளை (23) மு.ப. 10.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி இம்மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 08ஆம் திகதி கூடியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அறிவித்திருந்தது.
அத்துடன், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் அம்மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment