நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை சட்ட மாஅதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனு இன்று (12), மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நீதித்துறை மற்றும் நீதவான்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் சட்டத்தரணிகள் பலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் ஏன் தண்டனை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை, ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இராஜாங்க அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது. அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவிட்டந்திருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த தினத்தில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment