ரொனால்டோ குறித்த செய்திக்கு போர்த்துக்கல் கால்பந்து மறுப்பு

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ எச்சரித்ததாக வெளியான செய்தியை போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியின் ஆரம்ப அணியில் இடம்பெறாமல் இருக்கையில் அமரவைக்கப்பட்டதற்காகவே 37 வயதான ரொனால்டோ இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக போர்த்துக்கலின் ‘ரொகோர்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான போட்டியின்போது தாம் மாற்றப்பட்டதற்கு போர்த்துக்கல் அணித் தலைவரான ரொனால்டோ கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

“ரொனால்டோ ஒருபோதும் தேசிய அணியில் இருந்து வெளியேறுவதாக அச்சுறுத்தவில்லை” என்று போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ரொனால்டோ அளித்த பேட்டி ஒன்றில் தனது மான்செஸ்டர் யுனைடட் கழகத்தை விமர்சித்ததை அடுத்து பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையில் அவர் அந்தக் கழகத்தில் இருந்து விலகியுள்ளார்.

போர்த்துக்கலின் ஆரம்பப் போட்டிகளில் ரொனால்டோவுக்கு பதில் வீரர் அனுப்பப்பட்ட நிலையில், “அவருக்கு அது பிடிக்கவில்லை” என்று பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான நொக் அவுட் போட்டிக்கான ஆரம்ப அணியில் ரொனால்டோ இடம்பெறவில்லை என்பதோடு அவருக்கு பதில் 21 வயது கொன்காலோ ராமோஸ் அணியில் சேர்க்கப்பட்டார். அந்தப் போட்டியில் ராமோஸ் ஹட்ரிக் கோல் பெற்றதோடு, போர்த்துக்கல் 6–1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றிக்குப் பின்னர் போர்த்துக்கல் வீரர்கள் மைதானத்தில் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் ரொனால்டோ மைதானத்தை விட்டு வெளியேறுவதை காண முடிந்தது.

இந்நிலையில் போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...