இலங்கை அணியின் இந்திய பயண விபரம் வெளியானது

எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நேற்று (08) வெளியிட்டது.

வரும் ஜனவரி மாதம் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு மூன்று டி20 சர்வதேச போட்டிகளிலும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடவுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி ஜனவரி 3ஆம் திகதி மும்பாயில் நடைபெறவுள்ளது. டி20 தொடர் நிறைவடைந்த பின் ஜனவரி 10ஆம் திகதி கெளஹாத்தியில் ஒருநாள் தொடர் அரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி கடைசியாக இந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடியபோதும் அதில் ஒன்றில் கூட வெற்றியீட்டவில்லை.

இந்திய மண்ணில் இலங்கை அணி கடைசியாக ஒருநாள் தொடர் ஒன்றில் ஆடியது கடந்த 2017 டிசம்பர் மாதத்திலாகும். மூன்று போட்டிகளைக் கொண்ட அந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 1–2 என இழந்தது.

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி வரும் 2023 ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுவுள்ள நிலையில் இலங்கை அணிக்கு இந்திய சுற்றுப்பயணம் முக்கியமானதாக அமையும்.

இதன்போது இலங்கை சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியும் இந்தியா சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.

இதனை அடுத்து இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும்.


Add new comment

Or log in with...