நீண்ட நாள் தகராறு கொலையில் முடிந்தது; மாளிகாவத்தையில் சம்பவம்

நீண்ட நாள் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவமொன்று மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (06) மாலை கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் இரும்புக் குழாயால் தாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குழுவினரால் கை, கால்களால் தாக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் மாளிகாவத்தை பிரதேசத்தில், மஸ்ஜித் வீதியில் வசிக்கும் 44 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் 118 எனும் அவசர தொலைபேசி அழைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறிது காலமாக இடம்பெற்று வந்த பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், தகராறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...