மின் கட்டணத்தை உயர்த்தாவிடின் 6 மணி நேரமாக மின்வெட்டு நீளும்

பாராளுமன்றில், அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் எதுவும் கிடையாதென மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய இக்கட்டான நிலையில் நடைமுறைக்குப் பொருத்தமான வகையில் மின்கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாவிட்டால் அடுத்த வருடத்தில் 06 முதல் 08 மணி நேரம் வரை தினந்தோறும் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சார சபை தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 70 பில்லியன் ரூபாவையும் மின் விநியோகத்தர்களுக்கு

40 பில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதென சபையில் தெரிவித்த அவர்,

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதைத் தவிர விட தற்போதைய நிலையில் மாற்றுத்திட்டம் எதுவும் கிடையாதென தெரிவித்த அமைச்சர்,மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதானால் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் மின்சார சபை எதிர்கொண்ட நட்டத்தை ஈடு செய்வதற்காகவே மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துப் பார்க்கின்றனர். எனினும் உண்மை அதுவல்ல. தற்போதைய மின்சார உற்பத்தி செலவு மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செலவுகள் ஆகியவையே இதற்கு காரணமாகும்.

கடந்த காலங்களின் எதிர்கொண்ட நட்டத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் எவ்வித பரிந்துரைகளும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை. மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒரு வருடத்தில் இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்யும் வகையிலான யோசனைகள் மாத்திரமே அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மின்னுற்பத்திக்கான மொத்த செலவை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து அதன் அறிக்கையை அமைச்சுக்குச் சமர்ப்பித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...