ஜாதக கதைகள் ஒலிப்புத்தகத்தின் இரண்டாவது தொகுதி வெளியீடு

அதிவணக்கத்துக்குரிய சங்கமித்தை தேரர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தமையை குறிக்கும் முகமாக 2022 டிசம்பர் 02 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் 'ஜாதக கதைகள்' சிங்கள மொழி மூலமான ஒலிப்புத்தகத்தின் இரண்டாவது தொகுதி வெளியிடப்பட்டது.

ஜாதககதைகள் தொகுப்பிலிருந்து நன்னெறிக்கதைகள் என்ற கருப்பொருளின்கீழ் 50 ஜாதக கதைகள் இந்த ஒலிப்புத்தகத்தில் இலங்கை மக்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளதுடன் கட்புலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பின் முதலாவது பாகம் இந்திய இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டுநிறைவினைக் குறிக்கும் முகமாக 2022 ஜூன் 14 ஆம் திகதி பொசன் போயா தினத்தன்று அநுராதபுரத்தில் உள்ள புனித ருவான்வெலி மஹா சேயா வளாகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

அதி வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினர், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரிவேனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜித பேருகொட, பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமகால இந்தியக் கற்கைகளுக்கான நிலையம், இரத்மலானையிலுள்ள சிலோன் செவிப்புலன் மற்றும் விழிப்புலனற்றோர் பாடசாலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமகால இந்தியக் கற்கைகள் நிலையம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த திட்டமான ஜாதக கதைகள் ஒலிப் புத்தகம் அதி வணக்கத்துக்குரிய ரம்புக்கணை சித்தார்த்த தேரரின் மேற்பார்வையுடனும், களனி பல்கலைக் கழக இந்தி மொழிக் கற்கைகள் பிரிவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் உபுல் ரஞ்சித் கேமவிதானகமகே, டாக்டர்.டபிள்யூ.ஏ.அபேசிங்க, பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர் திருமதி வத்சலா சமரகோன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களின் பங்களிப்புடனும் தொகுத்து வெளியிடப்பட்டது.

அத்துடன், பௌத்தம் மற்றும் பௌத்த மரபுரிமைகள் தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச வினா விடைப்போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவிலுள்ள பல்வேறு நகரங்களிலுமுள்ள பௌத்த தலங்களுக்கான 5 நாள் சுற்றுலாவினை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாடு திரும்பியவர்களை இந்நிகழ்வின்பொது உயர் ஸ்தானிகர் சந்தித்திருந்தார். இவ்வெற்றியாளர்கள் தமது இந்திய பயணத்தின் போதான விருந்தோம்பல் மற்றும் அன்பிற்காக இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர். பிரிவேனா கல்வி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இந்த வினாவிடைப் போட்டியில் சுமார் 6000 பிரிவேனா மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் இந்த ஒலிப்புத்தகமானது இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட தம்ம தானம் என விவரித்திருந்தார். இந்த ஜாதகக் கதைகள் இந்தியாவிடமிருந்து பௌத்தத்தை பரிசாகப் பெற்ற முதல் நாடுகளில் சிறப்பான இடத்தைக்கொண்டிருக்கும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாயிரமாண்டுகளுக்கும் அதிககால பழைமைவாய்ந்த நெருக்கமான கலாசார உறவுகளை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இதேவேளை, இலங்கையில் தம்ம மற்றும் பிரிவேனா கல்விக்கு வழங்கும் ஆதரவுக்காக இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜித பேருகொட இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய இலங்கை மக்களிடையிலான பிணைப்பினை வலுவாக்குவதில் பௌத்தம் மிகவும் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டுள்ளது. அத்துடன், இரு நாடுகளிடையிலுமான பௌத்த உறவை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இந்தியாவால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.  2021 அக்டோபரில் புனித 'வப் பொயா' நாளில் இலங்கையிலிருந்து புனித நகரமான குஷிநகருக்கு சர்வதேச விமான சேவையின் அங்குரார்ப்பண சேவை இடம்பெற்றிருந்தமை,  2021 அக்டோபரில், வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபூதி மஹா விஹாரையில் உள்ள புனித கபிலவஸ்து புத்த சின்னங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தமை உட்பட பல்வேறு திட்டங்கள் இரு அயல் நாடுகளிடையிலுமான நெருக்கமான பௌத்த தொடர்புகளை சுட்டிக்காட்டும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கவையாகும். 


Add new comment

Or log in with...