இலங்கை உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறுவதில் சிக்கல்

ஆப்கான் அணி முன்னேற்றம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பல்லேகலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 229 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றிருந்தபோதும் மழை குறுக்கிட்டதை அடுத்து போட்டி கைவிடப்பட்டது.

இதனால் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா ஐந்து புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்மூலம் அந்தப் புள்ளிப் பட்டியலில் 115 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை உறுதி செய்துகொண்ட ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற்றது.

இந்நிலையில் ஏற்கனவே ஆப்கானுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் 67 புள்ளிகளைப் பெற்று தற்போது 10ஆவது இடத்தில் உள்ளது.

2023இல் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு போட்டியை நடத்தும் இந்தியாவுடன் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகளே நேரடித் தகுதி பெறும்.

இந்தப் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை பெறும் அணிகள் ஐந்து இணை அங்கத்துவ நாடுகளுடன் இணைந்து உலகக் கிண்ணத்தின் எஞ்சிய இரு இடங்களுக்காக தகுதிகாண் போட்டிகளில் ஆட வேண்டி உள்ளது.

இந்நிலையில் ஒருநாள் சுப்பர் லீக்கின் கீழ் ஆப்கானுடனான நாளைய (30) கடைசி ஒருநாள் போட்டி உட்பட மேலும் நான்கு போட்டிகளே இலங்கை அணிக்கு எஞ்சியுள்ளன. இந்த போட்டி அட்டவணையின்படி வாரும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் இலங்கை ஆடவுள்ளது.

இதன்படி இலங்கை அணி இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றாலும் மொத்தமாக 107 புள்ளிகளையே பெற முடியும். இது நேரடி தகுதி பெறும் கடைசி இடத்தை பிடிப்பதற்கே போதுமானது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் (88 புள்ளி), தென்னாபிரிக்க (59 புள்ளி) அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதிபெற போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...