டயனா கமகேவின் எம்.பி. பதவி தொடர்பான மனுவை விசாரணை செய்ய முடிவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் எம்.பி. பதவி சர்ச்சை தொடர்பான மனுவை பரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரஜா உரிமை இன்றி இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் எம்.பி. பதவி வகிப்பதாகவும் அதனை இரத்துச் செய்யுமாறு கோரி சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த வழக்கின் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட ஏனைய பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் எழுத்தாணை கோரி தாக்கல் செய்த குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை விசாரிப்பதற்கு நடுவர் குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, டயானா கமகேவிற்கு டிசம்பர் 15 வரை வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் உண்மைத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் முறைப்பாடு தொடர்பில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...