பக்குவப்பட்ட வாழ்வு எவ்விதம் அமைய வேண்டுமென்பதை நற்பண்புகள் வரையறை செய்கின்றன. எமது வாழ்வில் எல்லா நிலைகளிலும் எப்போதும் இந் நற்பண்புகள் பிரதிபலிக்க வேண்டும். ஏனைய உயிரினங்கள் அனைத்தை விடவும் பகுத்தறிவுள்ள மனிதன் தனித்துவமான உயர்நிலையை அடைய நற்பண்புகளே காரணமாக அமையும். உலகில் தோன்றிய எல்லா சமூகங்களும் நற்பண்புகளுக்கு தனியானதொரு இடத்தை வழங்கியுள்ளதோடு நற்பண்புகள் தொடர்பான செயற்பாடுகளையும் பேணிவந்துள்ளன.
'அக்லாக் ஹஸனா', 'மகாரிமுல் அக்லாக்', 'அதப்' போன்ற பதங்கள் நற்பண்புகளை சுட்டிக்காட்டுகின்றன. நற்பண்புகளுக்கு இஸ்லாம் உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது. நற்பண்புகள் பற்றி அல்குர்ஆனும், ஸூன்னாவும் எமக்கு எடுத்தியம்பியுள்ளன. நபி (ஸல்) அவர்கள் நற்பண்பின் சிகரமாக விளங்கினார்கள். நற்பண்புகளை நபிகளாரிடம் கற்றுக்கொள்ளுமாறு அல்குர்ஆன் போதிக்கின்றது. நற்பண்புகளால் சிறந்தவர்களே உங்களில் சிறந்தவர்களென குறிப்பிட்டுள்ள அல்குர்ஆன், நற்பண்பு மிக்கோராய் வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
அல்குர்ஆன் நற்பண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. நற்பண்புகளுக்கு முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அன்னார் கைகொண்ட நற்பண்புகள் எதிரிகளைக் கூட இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கச்செய்ததோடு அவர்கள் அதன் காவலர்களாக மாறவும் வழிவகுத்தன. ஆரம்ப காலம் முதல் இஸ்லாம் பரவுவதற்கு நற்பண்புகளே காரணமாக அமைந்துள்ளன. இதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. ஸூரா லுக்மான், ஸூரா புர்கான் ஆகிய அத்தியாயங்கள் ஒரு முஸ்லிமிடம் காண வேண்டிய நற்பண்புகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளன.
'அல்லாஹ்வுக்கு இணை வைக்க வேண்டாம், தொழுகையை நிலை நிறுத்துங்கள். நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள். உங்களுக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களின் போதும் பொறுமையைக் கடைபிடியுங்கள். மனிதர்களை விட்டும் உங்கள் முகத்தை திருப்ப வேண்டாம். பூமியில் பெருமையோடு நடக்க வேண்டாம். நடையில் நடுநிலைமையைக் கடைபிடியுங்கள். சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். உரத்து கத்தும் கழுதையின் சப்தமே சப்தங்களில் வெறுக்கத்தக்கதாகும் (ஸூரா லுக்மான்-19) என்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கின்றது.
இவ்வசனம் குறிப்பிடும், 'பெருமையோடு நடக்க வேண்டாம், நடையில் நடு நிலையைப் பேணிக் கொள்ளுங்கள் என்பதன் ஊடாக நாம் படிப்பினை பெற வேண்டும். வீதியின் ஒழுங்குகளை கடைபிடித்தல், பாதசாரிகளின் உரிமைகளை அனுசரித்தல் போன்ற பல விடயங்கள் குறித்து நாம் கவனம் வேண்டியுள்ளது.
இதேவேளை அல் குர்ஆன், 'அல்லாஹ்வின் நல்லடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள் (ஸூரா புர்கான் - 73) என்று குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு நபி (ஸல்) அவர்கள் வீதியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குக் கூட வழிகாட்டியுள்ளார்கள். வீதியில் பயணிக்கும் போது அன்னார் வலது பக்கமாக செல்வார்கள். அமைதியாக நடப்பார்கள். பார்வையை தாழ்த்தி கொள்வார்கள். ஏனையவர்களுக்கு இடையூறின்றி நடந்து கொள்வார்கள். வீதியில் சந்திப்பவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்' உள்ளிட்ட பல விடயங்களைக் கடைபிடித்துள்ளார்கள்.
இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் பாதையில் அமர்வதைவிட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்' என்றார்கள். அதற்கு ஸஹாபாக்கள், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களே... நாம் பாதையில் அமர்ந்து கதைப்பதில் என்ன பிரச்சினை, தடையிருக்கிறது?' என்று கேட்டனர். அதற்கு நபிகளார், 'நான் சொல்வதை நீங்கள் மறுத்தால் பாதையின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்' என்றார்கள். அப்போது ஸஹாபாக்கள், 'பாதையின் உரிமை என்றால் என்ன?' என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், 'பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள், பாதையின் காணப்படும் தடைகளை அகற்றிவிடுங்கள், ஸலாத்துக்கு பதிலளியுங்கள், நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்' என்றார்கள்.
(ஆதாரம் - முஸ்லிம்)
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தெருக்களில் சந்திக்கு சந்தி கூடியிருந்து அரட்டை அடிப்பதும் வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வீதிகளில் செல்லும் போது ஏனையவர்களும் பாதையில் பயணிக்கின்றார்கள் என்பதை பொருட்படுத்தாத நிலையில் பயணிப்பதும், வீதி போக்குவரத்து உரிமைகளை கருத்தில் கொள்ளாது செயற்படுவதும் மோட்டார் பைசிகள் உள்ளிட்ட வாகனங்களை அளவுக்கு மீறிய வேகத்தில் செலுத்துவதும் சர்வசாதாரண நிலையை அடைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாத்திற்கு முரணானவை என்பதை அல் குர்ஆனும் நபிகளாரின் வழிமுறைகளும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் அறிவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
இஸ்லாமிய வழிகாட்டல்களின் படி, வீதி ஒழுங்குகளை மதித்து செயற்படுவதும் நற்பண்புகள் தான். இதற்கு அல் குர்ஆனும், நபிமொழிகளும் தெளிவான சான்றுகளாக உள்ளன. அதனால் இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு அமைய வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்வோம்.
மௌலவி எம்.யூ.எம். வாலிஹ் (அல் அஸ்ஹரி)
வெலிகம
Add new comment