அஜித் நிவாட் கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை டிசம்பர் 15 வரை நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி மற்றும் முறைகேடுகளுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பானவர் என்றும் அவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் அதனை தடுக்குமாறு கோரி, ஜனாதிபதியின் சமூக விவகார பணிப்பாளர் நாயகம் ரஜித கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட மனு தொடர்பிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, அஜித் நிவார்ட் கப்ரால் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த இயலாது என முதற்கட்ட ஆட்சேபனை தெரிவித்தனர்.

முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை டிசம்பர் 15ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...