ரூ. 25 இலட்சம் சம்பளம் என்பது பொய்; சம்பளத்தை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர்

- கப்ராலே ரூ. 150,000 ஆக இருந்த சம்பளத்தை ரூ. 400,000 ஆக உயர்த்தினார்
- இல்லாத ஓய்வூதியத்தையும் அவரே உருவாக்கினார்
- அமைச்சரவை அந்தஸ்து; அதற்கேற்ற பாதுகாப்பு
- பொதுமக்கள் பணத்தில் தனிப்பட்ட பணிக்குழாமும் இருந்தன
- ஆளுநராக ஓய்வூதியம் பெறமாட்டேன்; கிடைத்தாலும் நிராகரிப்பேன்

மத்திய வங்கியின் ஆளுநராக மாதாந்தம் ரூ. 25 இலட்சம் சம்பளம் பெறுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஓய்வூதியத்தை பெறுவதாகவும் தெரிவிக்கப்படும் கருத்துகளை கலாநிதி நந்தலால் வீரசிங்க முற்றாக மறுத்துள்ளார்.

இன்று (24) இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற நாணயச் சபை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் பதிலளிக்கையில்,

எவரேனும் ஒருவர் பொய்யான விடயமொன்றை கூறுமிடத்து, ஒரு சில அரசியல்வாதிகள் அதனை உண்மையென அனைத்து இடங்களிலும் தெரிவித்து வருவது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.

எனக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எந்தவொரு ஓய்வூதியமும் வழங்கப்படுவதில்லை. நாட்டை பிரிதிநிதித்துவப்படுத்தி நான் உள்ளிட்ட ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதற்காக பணியாற்றியிருந்தோம். எல்லோரையும் போன்று அதற்கு வழங்கப்படும் சம்பளம் அக்காலத்தில் எனக்கும் கிடைத்திருந்தது.

எனக்கு ரூ. 25 இலட்சம் சம்பளம் கிடைப்பது என்பது பொய்யான விடயமாகும். நான் மத்திய வங்கியில் 29 வருடங்கள் பணியாற்றியுள்ளேன் அதற்காக அனைவரையும் போன்று எனக்கும் அரசாங்க ஓய்வூதியம் கிடைக்கும். அது ஒரு குறைந்த தொகையாகும்.

அது தவிர, மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம், வாகனம், உத்தியோகபூர்வ இல்லம் ஆகியன எனக்கும் கிடைக்கின்றது.

இதற்கு முன்னர் இருந்த மத்திய வங்கி ஆளுநர் (அஜித் நிவாட் கப்ரால்) இப்பதவிக்கு வரும்போது ரூ. 150,000 ஆக இருந்த சம்பளத்தை ரூ. 4 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அமைச்சரவை அந்தஸ்துக்கு சமனான அந்தஸ்தையும் உயர்த்திய அவர், வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து தனக்கான தனிப்பட்ட ஊழியர் குழாமையும் உருவாக்கிக் கொண்டார். இக்குழாம் ஊடகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நபர்களைக் கொண்டதாக இருந்தது.

அமைச்சரவை அமைச்சருக்கும் இல்லாத பாதுகாப்பையும் அவர் பெற்றிருந்தார். STF உள்ளிட்டோர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இதில் உள்ளடங்கியிருந்தனர்.

இவ்வாறான எந்தவொரு பாதுகாப்பையும் நான் பெறவுமில்லை, பெறப்போவதுமில்லை.

அந்த சலுகைப் பொதியுடன் ஒப்பிட்டு பார்க்கப் போனால் எனக்கு தற்போது கிடைப்பது, வழக்கமாக மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைக்கும் ரூ. 4 இலட்சம் சம்பளம், உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனம் ஆகியனவே.

எனவே, ரூ. 25 இலட்சம் சம்பளம் என்பதும், IMF ஓய்வூதியம் என்பதும் பொய்யான கருத்துகளே.

அந்த வகையில், எனக்கு முன்னர் இருந்த ஆளுநருக்கு கிடைத்த வசதிகளிலும் குறைவான வசதிகளே எனக்கு கிடைப்பதோடு, அவருக்கு வழங்கிய பாதுகாப்பு எனக்கு உண்மையில் அவசியமுமில்லை.

முந்தைய ஆளுநருக்கு பொருளாதாரத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் போதிய தெளிவு இருந்ததா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தனது பாதுகாப்பு தொடர்பில் போதிய தெளிவு இருந்துள்ளது.

அத்துடன் இதற்கு முன்பு இருந்த ஆளுநர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளையில், அவருக்கு முன்பு இருந்த ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இதுவரை மத்திய வங்கி ஆளுநருக்கு இல்லாத ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அந்த வகையில் இதற்கு முன்பிருந்த இரு ஆளுநர்களும் ஒரு மாதம் பணியாற்றியிருந்தாலும் அவர்களது சம்பளத்திற்கு ஏற்ற வகையில் ஓய்வூதிய வழங்கப்படுகின்றது.

ஆனால் அவ்வாறான ஓய்வூதியத்தை பெற நான் தயாரில்லை. அரசாங்க சட்டத்திற்கு அமைய, வழக்கமான ஓய்வூதிய திட்டத்தை பெற அரச ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் அரச சேவையில் ஈடுபட வேண்டும்.

அந்த வகையில் நான் மத்திய வங்கி ஆளுநராக குறுகிய காலத்திற்கே பணியாற்றவுள்ளேன். குறுகிய காலத்திற்கு இவ்வாறு பணியாற்றி அவ்வாறானதொரு ஓய்வூதியத்தை பெறமாட்டேன் என நான் கொள்கை ரீதியான முடிவைக் கொண்டுள்ளேன். அவ்வாறு கிடைத்தாலும் நான் அதனை நிராகரிப்பேன் என நம்பிக்கையுடனும் உறுதியாகவும் கூறுகின்றேன்.


Add new comment

Or log in with...