பொதுஜன பெரமுன லான்சாவை தாக்க முயன்றதாக ஐ.ம.ச. சமிந்த விஜேசிறி வெளியேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பாராளுமன்றத்தின் அவையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்தார்.

இன்று (23) காலை பாராளுமன்றம் ஆரம்பமாகி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதல் நாள் விவாதம் இடம்பெற்றது.

இவ்வேளையில், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கவும் முற்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சமிந்த விஜேசிறி எம்.பியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்ததோடு, இன்றையதினம் முழுவதும் பாராளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொள்ள தடைவிதித்தார்.

அத்துடன் இது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்தார்.

இதன் பின்னர் அவர் அவையிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...