75ஆவது சுதந்திர தினத்தில் திரையரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு 50% கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகள்

- தேசிய ஒளடத கொள்கையில் திருத்தம்
- இலங்கை - மொரிசியஸ் இடையில் கைதிகளை பரிமாற ஒப்பந்தம்
- நச்சு மற்றும் அபாய ஒளடத பாவனையை தடுக்க ஜனாதிபதி செயலணி
- உள்ளூராட்சி சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு
- தேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்த சட்டம்
- பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம்

இவ்வார அமைச்சரவையில் 14 தீர்மானங்கள்

75ஆவது சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கு மற்றும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

75 ஆவது சுதந்திர தினமான 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும், அன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தின் 50% வீதக் கழிவுடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. தேசிய புவி உயிர்க்கோளக் காப்பகங்கள் ((National Biosphere Protection Day)) தினத்தை பிரகடனப்படுத்தல்
ஓவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி 'புவி உயிர்க்கோள காப்பகங்கள் தினம்' யுனெஸ்கோ பொதுச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

புவி உயிர்க்கோள காப்பகங்களைப் பாதுகாப்பதற்கான ஊக்குவிப்புக்களை ஏற்படுத்துவதற்காக, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் மக்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி 'தேசிய புவி உயிர்க்கோள காப்பகங்கள் தினம்' பிரகடனப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலங்கையின் தேசிய ஒளடதங்கள் கொள்கையை திருத்தம் செய்தல்
தேசிய ஒளடதங்கள் கொள்கை 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு இற்றைக்கு 15 ஆண்டுகளாவதுடன், சமகாலத் தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் குறித்த கொள்கையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களால் நியமிக்கப்படுகின்ற குழுவின் மூலம் தேசிய ஒளடதங்கள் கொள்கையை திருத்தம் செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கை அரசு மற்றும் மொரிசியஸ் குடியரசு ((Republic of Mauritius)) இற்கிடையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆட்களை பரிமாற்றிக் கொள்ளும் ஒப்பந்தம்
1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளைப் பரிமாற்றல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை நீதிமன்றத்தால் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்படுகின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு அவர்கள் தத்தமது நாட்டில் தண்டனைகளை அனுபவிக்கக் கூடிய இயலுமை உண்டு.

அத்துடன், ஏதேனுமொரு நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு எஞ்சியுள்ள தண்டனைக்காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் ஏற்பாடுகளும் குறித்த சட்டத்தில் காணப்படுகின்றது. அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் குறித்த நாட்டுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது அவசியமாகும்.

அதற்மைய, இலங்கை மற்றும் மொரிசியஸ் குடியரசுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆட்களை பரிமாற்றிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. நச்சுப் போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் பாவனையைத் தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணியை தாபித்தல்
நச்சுப் போதைப்பொருட்கள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் பாவனையைத் தடுப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை அடையாளங்காணல், திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணியொன்றை தாபிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோ இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 2022 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 'அமைச்சரவையால் நியமிக்கப்படுகின்ற குழுவை' நியமித்தல்
2002 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சக்திவலு வழங்கல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 02 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய நியமிக்கபட்டுள்ள 'சக்திவலு வழங்கல் குழுவின்' பரிந்துரைக்கமைய விடயதான அமைச்சர், எந்தவொரு நபருக்கு அல்லது கம்பனிக்கு பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்றவற்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5(1) ஆம் உறுப்புரையில் உட்சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனாலும் 2002 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சக்திவலு வழங்கல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் இரண்டு வருட காலத்திற்கு விதிக்கப்பட்டுள்ளமையால் குறித்த சட்ட ஏற்பாட்டின் கீழ் நியமிக்கப்பட்ட சக்திவலு வழங்கல் குழு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், 2022 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க 2022 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டத்தின் பிரகாரம் 'சக்திவலு வழங்கல் குழுவுக்கு' பதிலாக 'அமைச்சரவையினால் நியமிக்கப்படும் குழுவை' நியமிப்பதற்கு ஏற்பாடுகள் உண்டு. அதற்கமைய, குறித்த குழுவை நியமிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. சுற்றாடல் அச்சுறுத்தல் பிரதேசங்கள் தொடர்பான தேசிய கொள்கை
சமகாலத்தில் இடம்பெறுகின்ற முறையற்ற காணிப் பயன்பாடுகள் மற்றும் விவசாய முறைகள், திண்மக்கழிவகற்றல் மற்றும் பேண்தகு வகையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்தாமை போன்ற பல்வேறு மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் அழிவுகள், மண்ணரிப்பு, நீர்மூலங்கள் வற்றிப்போதல் மற்றும் மனித – வனவிலங்குகள் மோதல்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

அதனால் உயிர்ப்பல்வகைமை மற்றும் சுற்றாடல் தொகுதிகளின் இயல்பான இயக்கங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலைமை சுற்றாடல் தொகுதிகள் நீண்டகாலமாக அழிவடைந்து செல்வதற்குக் காரணமாக அமைகின்றது. அதனால், அனைவருக்குமான சமூகப் பொருளாதார ஆரோக்கியம் மற்றும் வாழக்கூடிய சூழலுக்காக, சுற்றாடல் கூருணர்வுள்ள பிரதேசங்களை நிறுவுவதன் மூலம் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக சுற்றாடல் கூருணர்வுப் பிரதேசங்கள் தொடர்பான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் காணப்படும் சுற்றாடல் கூருணர்வுப் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்திற்காக சமூகத்தவர்கள், தனியார் துறையினர், அரச துறையினர் மற்றும் விசேட நிபுணத்துவர்கள் போன்ற அனைத்து துறையினரிடமும் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொண்டு மற்றும் முகாமைத்துவ அணுகுமுறையொன்றை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தி சுற்றாடல் கூருணர்வுப் பிரதேசங்களின் பாதுகாப்புக்கும், பேண்தகு வகையிலான பயன்பாட்டுக்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக இலங்கையின் சுற்றாடல் கூருணர்வு பிரதேசங்கள் தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. இலங்கை சுற்றாடல் குறிச்சொல் பெயரிடல் (National framework for Eco Labelling) தொடர்பான தேசிய சட்டகம்
நீண்டகால சுற்றாடல், சமூக மற்றும் பொருளாதார நல்விருத்திக்காக உற்பத்தியாளர்கள் பேண்தகு வகையில் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், நுகர்வோர் பொறுப்புடனும் புத்திகூர்மையாகவும் உற்பத்திகள் மற்றும் சேவைகளை நுகர்தல் அவசியமாகும்.

அதற்காக பேண்தகு அபிவிருத்தி நோக்கம் 12 இன் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு 'பேண்தகு வகையிலான நுகர்வு மற்றும் உற்பத்திகளை உறுதிப்படுத்தல்' அத்தாட்சிப்படுத்துவதற்காக தரநிலைப்படுத்தல் மற்றும் சான்றுப்படுத்தல் போன்ற விஞ்ஞான ரீதியான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, உற்பத்திகளின் சுற்றாடல் செயலாற்றுகையை தமது வாடிக்கையாளர் உள்ளிட்ட ஏனைய விநியோகச் சங்கிலியில் தொடர்புபட்டுள்ள தரப்பினர்கள் நம்பத்தன்மையுடன் குறித்த உற்பத்திகளை கொள்வனவு செய்யும் போது, தீர்மானம்; எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் சுற்றாடல் குறிச்சொல் பெயரிடல் (யேவழையெட கசயஅநறழசம ழn நுஉழ டுயடிநடடiபெ) தொடர்பான தேசிய சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. உள்ளுராட்சி அதிகாரசபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிறேம்நாம் ஸ்ரீ தொலவத்த அவர்களால் தனிப்பட்ட  உறுப்பினர் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் நலன்களுக்காகவும், அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையிலான சூழலை உருவாக்கும் நோக்கில் உள்ளுராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தில் தற்போது காணப்படுகின்ற ஏற்பாடுகளுக்கமைய பெண்களுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற வகையில் முதலாவது நியமனப் பத்திரத்திற்கமைய தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்கு குறையாததும், மற்றும் இரண்டாவது நியமனப் பத்திரத்திற்கமைய தேர்வு செய்து அனுப்ப வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25% வீதத்திற்குக் குறையாததுமான இளைஞர் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை உட்சேர்த்து உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகரித்துள்ளது.

10. தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிக்கும் சட்டம்
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் தேர்தல் பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டம்
2012 டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய 1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் காப்பக சட்டத் திருத்தத்திற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டவரைஞரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடதாசி ஆவணங்களுக்கு மேலதிகமாக ஒலி, ஒளி ஆவணங்கள், திரைப்பட ஆவணங்கள் மற்றம் மின்னணு ஆவணங்கள் போன்றன பாதுகாப்புக்காக சமர்ப்பிக்கப்படுவதால், சர்வதேச தரநிலைப்படுத்தல்கள் மற்றும் உள்ளுர் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் தேசிய சுவடிகள் காப்பக சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆவண முகாமைத்துவம், ஆவணக் காப்பு மற்றும் மின்னணு ஆவணங்களின் முகாமைத்துவம் தொடர்பான வல்லுநர்களுடன் அடங்கிய   குழுவொன்றை நியமித்து பொருத்தமான திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும், அதற்கமைய பொருத்தமான அறிவுறுத்தல்களை உட்சேர்த்து தற்போது சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
தற்போது நடைமுறையிலுள்ள 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிசு கட்டளைச் சட்டம் இதுவரை 37 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டளைச் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்காக 2014 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சமகால சமூக நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிசு கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

13. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 202219 ஆம் இலக்க செலுத்தல் முறைமைகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் 2022/20 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. முன்மொழியப்பட்டுள்ள வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற நிதி நிறுவனங்களை நெருக்கடி முகாமைத்துவ சட்டகத்தின் கீழ் (Crisis management framework) வலுவூட்ட வேண்டிய தேவை துரிதமானதும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய பணியாக இலங்கை மத்திய வங்கி அடையாளங் கண்டுள்ளது.

நிதிப்பிரிவின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தலுக்காக தீர்வு சட்டகத்தை  பலப்படுத்த வேண்டிய தேவை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறுகிய காலப்பகுதியில் முழுமையான புதிய சட்டமொன்றைத் தயாரிப்பதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனுமதிப்பத்திர உரித்துடைய வங்கித் தீர்வு,  வாப்புத்தொகை காப்புறுதி மற்றும் அனுமதிப்பத்திர உரித்துடைய வங்கிகளின் கணக்குகளை தீர்த்து மூடுதல்ஃமுடிவுறுத்தலுக்கான ஏற்பாடுகளை உட்சேர்த்து 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிகள் சட்டத்திற்கு குறைநிரப்பியாக முன்மொழியப்பட்டுள்ள வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...