டயானா கமகேவின் வெளிநாட்டுப் பயணத் தடை டிசம்பர் 15 வரை நீடிப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான தடையை டிசம்பர் 15ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, இன்றையதினம் (17) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

இதன்போது, ​​டயனா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, வழக்குடன் தொடர்பற்ற 3ஆம் தரப்பினரால் தமது கட்சிக்காரருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையை கோரியுள்ளதாகவும், வழக்கில் சம்மந்தப்படாத வெளி தரப்பினரால் அவ்வாறான உத்தரவைப் பெற முடியாது எனவும் சுட்டிக்காட்டியதோடு, குறித்த தடையை நீக்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதன்படி, குறித்த கோரிக்கையின் முடிவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வழங்கப்படுமெனத் தெரிவித்த பிரதான நீதவான், அதுவரை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வெளிநாட்டுப் பயணத்தடையை நீடிப்பதாக அறிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் உண்மைத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் முறைப்பாடு தொடர்பில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்பான அறிக்கைகைள சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அழைப்பு விடுதிருந்தார்.

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் கொண்டதன் பின்னர் குறித்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேக்கு இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இரட்டைக் குடியுரிமை உள்ளதா என்பது குறித்தும் இதுவரை நடந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்துமாறு வன்னிநாயக்க இதன்போது நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

நவம்பர் 11 ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவலை மேற்கோள் காட்டி, அவரது வெளிநாட்டு பயணங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு வன்னிநாயக்க நீதிமன்றத்தை வலியுறுத்தினார். அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டால் விசாரணைகள் முற்றாக தடைப்படும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட பிரதம நீதவான், இராஜாங்க அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக தடைசெய்து இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...