2023 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை அமைச்சர்களின் விசேட கூட்டம் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இன்று (14) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜட் 2023), இன்று (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் என்பதோடு, இதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

2023 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு, நாளை (15) ஆரம்பமாகவுள்ளதோடு, இதன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி பி.பட 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும். இதற்கு முன்னர் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்று கடந்த ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...