கிழக்கு மக்களின் உள்ளத்தில் எக்காலமும் வாழ்கின்ற மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத்

இன்று 35 ஆவது நினைவு தினம்

திருகோணமலை மாவட்ட மக்களின் பெரும் சொத்தாகவும், கிழக்கு அரசியல்வாதிகளில் மக்களால் நேசிக்கப்படுபவராகவும் விளங்கியவர் மர்ஹும் மஜீத். தேசிய மட்டத்தில் சகல இன மக்களின் நன்மதிப்பைப் பெற்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல்வாதியாக விளங்கிய அன்னாரது 35ஆவது வருட நினைவுதினம் இன்று (13.11.2022) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கைவாழ் முஸ்லிம் மக்களது உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் வாழ்நாள் முழுவதும் அவர் குரல் கொடுத்தார். திருமலை மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியிருந்த மக்களுக்கான கலங்கரைவிளக்காக அவர் திகழ்ந்தார். சமூக மறுமலர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். பாடசாலை மாணவப் பராயத்தில் கல்வியிலேயே திறமை காட்டியதால் ஆசிரியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15இல் கிண்ணியாவில் முஹம்மது சுல்தான் அப்துல் லெத்திப் என்ற கிராம உத்தியோகத்தருக்கு அவர் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலத்திலும் இடைநிலை கல்வியை திருமலை இந்துக் கல்லூரியிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் பெற்றார். தனது மேற்படிப்புக்காக இந்தியா சென்ற அவர், திருச்சி ஜமால் கல்லூரி, புனாவாதியா கல்லூரி மற்றும் சென்னை மாநில கல்லூரி ஆகியவற்றில் கற்று பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.இதனால் திருமலையின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக அடையாளப்படுத்தப்பட்டார்.

தனது இளமைக் காலத்தை மக்கள் சேவை, சமூகமாற்றம் போன்றவற்றுக்காக செலவிட்டார். இந்தியாவில் படிப்பை முடித்த பின்னர் 1959ஆம் ஆண்டு கிண்ணியா சிரேஷ்ட பாடசாலையின் அதிபராக கடமையேற்றார். மாணவரின் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். மாணவர்களிடம் ஒழுக்கவிழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதில் கண்டிப்பாக இருந்தார். விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென பெரிதும் உழைத்தார்.

கிண்ணியாவில் அவர் அதிபராக இருந்த காலம் அந்தக் கால மாணவர்களின் பொற்காலம் ஆகும். மாணவர்களுக்கு தனியான சீருடை வேண்டுமென வலியுறுத்தி அதை செயலிலும் காட்டினார். திருமலை மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக கிண்ணியா சிரேஷ்ட பாடசாலை மிளிர்வதற்கு அவர் வழிகோலினார்.

அதிபர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த பின்னர் சமூகப்பரப்பில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்தார். சமூக மாற்றத்தில் இளைஞர்களின் வகிபாகத்தை உணர்ந்து கொண்ட அவர் இளைஞர் சக்தியை அதற்காக பயன்படுத்த முனைந்தார். கிண்ணியாவில் எந்த விதமான நோக்கங்களுமின்றி கிடந்த இளைஞர்களை ஒருமுகப்படுத்தினார். கிண்ணியா முற்போக்கு வாலிபர் என்ற அமைப்பை 1961ஆம் ஆண்டு உருவாக்கி செயற்பட்டார்.

சிறந்த பேச்சாற்றலும் சமூகப்பற்றும் கொண்ட மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் கிண்ணியா முற்போக்கு வாலிபர் மன்றம் மூலம் பல வகைப்பட்ட சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்தார்.

1960ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மூதூர் தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்ற அவர், 1977ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பொது மராமத்து பதிலமைச்சராகவும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராகவும் தொடர்ச்சியாக 17 வருட அரசியலில் ஈடுபட்டார்.

ஏனைய இனங்களுடனும் அவர் நல்லுறவைப் பேணினார். தழிழ் மக்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததனால் அவர்களின் அபிமானத்தையும் பெற்றிருந்தார். யாருடனும் முரண்பட்டு அவர் அரசியல் நடத்தியதில்லை. காலஞ்சென்ற ஸ்ரீமாவே பண்டாரநாயக்க, பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அகியோருடன் நல்லுறவைப் பேணி சமுகத்தின் பிரச்சினைகளை வென்றெடுத்தார்.

கந்தளாய் குளத்தின் நீரை திசைதிருப்பி மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க உழைத்தார். கிண்ணியாவில் இஸ்லாமிய கலைவிழாவை நடத்தி இஸ்லாமிய நுண்கலை திறமைகளை வெளிக்கொணர்வதற்கு செயலாற்றினார். இஸ்லாமிய நுண்கலை இலக்கியம் தொடர்பான கண்காட்சியொன்றை நடாத்தி கலை, கலாசார விழுமியங்களை பன்முகப்படுத்தினார். தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் சேவையின் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்கச் செய்தார்.

அரபுலக தலைவர்களுடன் மிக நெருங்கிய உறவை கொண்டிருந்த மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் பயனடையும் திட்டங்களை உருவாக்கி அதில் வெற்றி கண்டார்.

நவம்பர் மாதம் 13ஆம் திகதியுடன் அவர் மறைந்து முப்பத்தைந்து வருடங்களாகின்றன. அவர் திருகோணமலை மாவட்ட மக்களின் மனங்களிலே என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது புதல்வர் நஜீப் ஏ. மஜீத் கிழக்கின் முதலமைச்சராக பதவி வகித்தார். நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் இவரது குடும்பத்தினர் இன்றும் சுதந்திரக் கட்சியின் தலைமைகளால் கௌரவிக்கப்படுகின்றனர். கடந்த 13.11.1987 அன்று நிகழ்ந்த அப்துல் மஜீதின் அகால மரணம் அவரது அபிமானிகளை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியது. மக்களின் உள்ளத்தில் அவர் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார்.

ஜமால்தீன் எம். இஸ்மத்...?
கிண்ணியா.


There is 1 Comment

Add new comment

Or log in with...