ரூ. 16.6 கோடி பெறுமதியான 8kg ஹெரோயின் மீட்பு; இதுவரை இருவர் கைது

- மேலும் பலரை தேடி பொலிஸார் வலைவீச்சு
- கடலில் கண்டெடுத்து பங்கிட்டுக் கொண்டதாக தெரிவிப்பு
- இவ்வருடத்தில் ரூ. 23.42 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்

நேற்று முன்தினம் (06) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மாத்தறை உப பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 544.3 கிராம் ஹெரோயின் உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (07) தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரைவ 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு விடுக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபேபிட்டிய, டயஸ்வத்தை பிரதேசத்தில்  உள்ள வீடொன்றை சோதனை செய்த இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் காலி உப பிரிவின் அதிகாரிகளால் 7 ஹெரோயின் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டின் முற்றத்தில் சூட்சுமமாக புதைக்கப்பட்ட குறித்த போதைப்பொருள் பொதிகளின் எடை  8 கிலோ 300 கிராம் எனவும், அதன் தெரு மதிப்பு ரூ. 166 மில்லியன் (ரூ. 16.6 கோடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதான பேருவளை டயஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேகநபர் நேற்றையதினம் (07) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கும் 7 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக மீன்பிடி படகொன்றில் சென்ற ஒரு சிலர், ஆழ்கடலில் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்த 2 பொலத்தின் பைகள் மிதப்பதைக் கண்டெடுத்ததாகவும், அதனை சோதனையிட்ட போது, ​​அதில் 25 ஹெரோயின் பொதிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த ஹெரோயின் பொதிகளை அதிலிருந்த 6 பேர் மற்றும் மீன்பிடி கப்பலின் உரிமையாளருடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேகநபர்களும் குறித்த படகில் பணிபுரியும் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

ஏனைய சந்தேக நபர்கள் மற்றும் போதைப் பொருட்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து அம்பாந்தோட்டை மகா ராவணா கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், கைப்பற்றப்பட்டு கடந்த நவம்பர் 07 ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ரூபா 6,622 - 13,244 மில்லியன் வீதி பெறுமதி கொண்ட 331 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பேருவளையில் தற்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன், 2022 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் மூலம் ரூ. 23.42 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தெரு மதிப்புடைய போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...