வீணாக அச்சம் கொள்ள தேவையற்ற நோய் குரங்கம்மை

இலங்கையில் முதலாவது குரங்கம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி டுபாய் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 19வயது மதிக்கத்தக்க இளைஞர் தான் இவ்வைரஸ் தொற்றுக்குள்ளான நபராக விளங்குகிறார். இவரிடம் காணப்பட்ட சந்தேகத்துக்கு இடமான அறிகுறிகளை அடிப்படையாக வைத்து அவரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பரீட்சிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அதனடிப்படையிலேயே இந்நபர் குரங்கம்மை தொற்றுக்குள்ளாகி இருப்பது கடந்த வெள்ளியன்று உறுதிப்படுத்தப்பட்டது.

குரங்கம்மை வைரஸானது 1970 இல் தான் முதன் முறையாக மனிதனில் அடையாளம் காணப்பட்டது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஒன்பது மாதக் குழந்தையொன்று இவ்வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்ததன் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டது. என்றாலும் இவ்வைரஸ் தொற்று ஆபிரிக்க கண்ட நாடுகளில் காணப்படும் ஒரு நோயாக நீண்ட காலம் இருந்தது.

இவ்வாறான நிலையில் 2003 இல் தான் இவ்வைரஸ் தொற்று ஆபிரிக்கக் கண்டத்திற்கு வெளியே அமெரிக்காவில் பதிவானது. அதன் பின்னர் அவ்வப்போது சில மேற்குலக நாடுகளிலும் இத்தொற்று அடையாளம் காணப்பட்டது.

ஆனால் 2020 ஜனவரி முதல் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாகத் தலைதூக்கிய கொவிட் 19 தொற்று 2022 மார்ச், ஏப்ரலாகும் போது ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் பெருவீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த சூழலில் கடந்த மே மாதம் (2022) குரங்கம்மை தொற்று பிரித்தானியாவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளிலும் பதிவாகும் நிலையை அடைந்தது இத்தொற்று.

இத்தொற்றானது அதன் ஐம்பது வருடகால வரலாற்றில் இப்போது தான் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கின்றது. அந்த வகையில் இற்றைவரையும் இத்தொற்றுக்கு 73 ஆயிரத்து 434 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைந்திருக்கும் தெற்காசியப் பிராந்தியத்தியத்திலும் 23 பேர் இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு அவர்களில் ஒருவர் உயிரிழந்துமுள்ளார்.

இவ்வாறான நிலையை இத்தொற்று முன்னொரு போதும் அடைந்திருக்கவில்லை. அதனால் முன்பு போன்றல்லாமல் தற்போது உலகின் பல நாடுகளிலும் இத்தொற்று பதிவாகக்கூடிய நிலைமையை அடைந்துள்ளமை குறித்து மருத்துவ விஞ்ஞானிகள் விஷேட கவனம் செலுத்தியுள்ளனர்.

இத்தொற்று கடந்த மே மாதம் பதிவாக ஆரம்பித்த போதிலும் இப்போது தான் இலங்கைக்குள் அடையாளம் காணப்படும் நிலையை அடைந்திருக்கின்றது. இத்தொற்றைத் தவிர்ப்பதற்கும் அது தொடர்பிலான மருத்துவ பரீட்சிப்புக்களை மேற்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் அந்தளவுக்கு இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜுன் முதல் இற்றை வரையும் இத்தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தைக் கொண்டிருந்த ஏழு பேரின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பரீட்சிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதல் ஆறு பேரின் மாதிரிகளில் எவரும் இத்தொற்றுக்குள்ளானவர்களாகக் கண்டறியப்படவில்லை. ஏழாவது நபரின் மாதிரிகள் தான் இத்தொற்றுக்குள்ளாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணத்துவ பிரிவு ஆலோசகர் டொக்டர் ஜுட் ஜயமஹா குறிப்பிட்டிருக்கிறார்.

'இத்தொற்று உறுதியாகியுள்ள நபர் மருத்துவ கண்காணிப்புடன் நலமுடன் உள்ளார். அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இத்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இற்றைவரையும் வெளியிப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, இது மிக நெருங்கிய தொடர்புகள் மூலம் தொற்றக்கூடிய நோயாக இருப்பதால் குரங்கம்மை குறித்து மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றுள்ளார். அநேநேரம் குரங்கம்மை தொற்றை தவிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான சகல ஏற்படுகளும் நாட்டில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு இத்தொற்று தொடர்பிலான மருத்துவப் பரீட்சிப்புக்களை மேற்கொள்வதற்கும் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குரங்கம்மை, கொவிட் 19 போன்று அச்சம் கொள்ள வேண்டிய ஒரு நோயல்ல என்பது தான் மருத்துவர்களின் கருத்து. ஆனாலும் இத்தொற்றைத் தவிர்த்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு சுகாதார வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடிக்கவும் தவறக்கூடாது. இத்தொற்று குறித்து சந்தேகம் ஏற்படுமாயின் அது தொடர்பில் தகுதிமிக்க மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்.

நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இந்நாட்டுக்குள் மேலுமொரு வைரஸ் நோயும் வந்து சேர்ந்திருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் இவ்வைரஸ் தொற்றைத் தவிர்த்துக்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது இன்றியமையாதது. இது மக்கள் முன்பாக இருக்கும் பாரிய பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...