அரச இலக்கிய விருது விழா; தமிழ் அரசியல் கைதியின் நூலுக்கு விருது

- சிவலிங்கம் ஆரூரனின் ஆதுரசாலை' நாவலுக்கு சிறந்த தமிழ் நாவலுக்கான விருது
- அவர் பெறும் இரண்டாவது அரச இலக்கிய விருது விழா

தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய 'ஆதுரசாலை' என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.

கொழும்பில் நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற 65ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பித்தளை சந்தியில் 2006ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் மகசின் சிறையில் தற்போதும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

 

 

இந்நிலையில் சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் ஒரு ஆங்கில நூல் உள்ளிட்ட 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதிய இந்த 08 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் விழாவுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர் 2016ஆம் ஆண்டு எழுதிய நாவலுக்கும் அரச இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி திக்கத்தை சேர்ந்த இவர், மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் முன்னெடுத்து வந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மகசின் சிறைச்சாலை சிரேஷ்ட அத்தியட்சகர் ஜகத் வீரசிங்கவின் பாதுகாப்புக்கு மத்தியில் பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமிருந்து அவருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டனர்.

சிவலிங்கம் ஆரூரனின் தந்தை ஒரு விமானப் பொறியியலாளர் என்பதும் குறிப்பிடத்கதக்கது.

ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது வழங்கும் விழா

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலங்கை எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 2022 அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் நேற்றுமுன்தினம் (28) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலைப் பேரவை, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 65ஆவது அரச இலக்கிய விருது விழாவில் 40 “அரச இலக்கிய விருதுகளும்” 03 “சாகித்ய ரத்ன” விருதுகளும் வழங்கப்பட்டன.

பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு (சிங்களம்), சிரேஷ்ட பேராசிரியர் கமனி ஜயசேகர (ஆங்கிலம்) மற்றும் டீ .ஞானசேகரன் (தமிழ் ) ஆகியோர், ஒரு கலைஞருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஜனாதிபதியினால் வழங்கப்படும் சாகித்திய ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எரிக் இளையப்ஆரச்சியின் “நகுல முனி” நாவலும் (சிங்களம்), பிரேமினி அமரசிங்கவின் “Footprints” (ஆங்கிலம்) மற்றும் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” (தமிழ்) நாவலும் சிறந்த நாவல்களாக விருது பெற்றன.

2022ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது விழாவுக்காக வெளியிடப்பட்ட நினைவுப் பதிப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அரச இலக்கிய சபையின் தலைவர் வண.ரம்புக்கண சித்தார்த்த தேரர், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோருடன், பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...