அழைப்பாணையை ஏற்று நீதிமன்றம் வராத சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்கு ஆஜராகாமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இன்றையதினம் (13) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று (13) நீதிமன்றில் ஆஜராகுமாறு, கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி  அழைப்பாணை விடுத்திருந்தது.

எனினும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிப்பதற்கு, சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் பொறுப்பு என்றும், அவர்கள் இந்த குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பிணை வழங்குகிறார்கள் என்றும், கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் சனத் நிஷாந்த மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பான மனுவொன்றை சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வகையில் குறித்த வழக்கு கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சனத் நிஷாந்தவிற்கு இன்றையதினம் (13) நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்தது.

குறித்த விடயம் தொடர்பில் தண்டனை வழங்காமலிருக்க, உரிய காரணத்தை இன்று முன்வைக்குமாறு குறித்த அழைப்பாணையில் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியிருந்தது.


Add new comment

Or log in with...