கோடிக்கணக்கில் பண மோசடி; சிறையிலுள்ள பிரியமாலியிடம் கைத்தொலைபேசி

பல கோடி ரூபா பண மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலியிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றை மீட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்றையதினம் (09) மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த கையடக்கத் தொலைபேசி அவரது உடமையிலிருந்து மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கையடக்கத் தொலைபேசியை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திலிணி பிரியமாலி எனும் குறித்த பெண், கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தின் (WTC) 34ஆவது மாடியில் சொகுசு அலுவலகமொன்றை நடாத்திச் சென்றுள்ளதோடு, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ. 226 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பெற்று அதனை மீள செலுத்தாமை தொடர்பில், குறித்த வர்த்தகரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...