பேருவளையில் தேசிய மீலாதுன் நபி விழா

தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் 9ஆம் திகதி (9-.10-.2022) ஞாயிற்றுக்கிழமை காலையில் இவ்விழா நடைபெறவிருக்கின்றது.

ஆதிகால அராபியரால் 'ஸெயிலான்' என அழைக்கப்பட்ட இலங்காபுரியிலே 'பர்பலி' என்று நாமம் பூண்டு பூர்வீக அராபியரின் குடியேற்றத்திற்கு பறைசாற்றி நிற்கும் பேருவளை மண்ணில் இத்தேசிய விழா கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இதேபோன்றதொரு தேசிய மீலாதுன் நபி விழா சில வருடங்களுக்கு முன்னரும் இதே பிரதேசத்தில் நடந்தேறியதைப் பலரும் அறிவர். இவ்வாறு இப்பிரதேசம் அடிக்கடி நினைவு கூறப்பட்டு வருவது இப்பிரதேசத்தின் மேன்மைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இந்நாட்டில் வாழும் சகல சமூகத்தினரும் முஸ்லிம்களின் ஆதிக்குடிகள் குடியேறிய இடம் பேருவளை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். அதன் ஊடாக முஸ்லிம்களின் பிரதான நகரமாக பேருவளை திகழுகின்றது. இதனை கட்டியம் கூறும் வகையிலேயே இப் பெருவிழாவும் மீண்டும் ஒருமுறை இங்கு நடாத்தப்படுகிறது.

பேருவளை, சீனன்கோட்டையில் அறிவொளி பரப்பிக் கொண்டிருக்கும் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் இவ்விழா நடைபெறுவதையிட்டு பேருவளை நகரம் மேலும் புகழ் பெறுகிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கான அரச விடுமுறை தினமாக தேசிய மீலாதுன் நபிவிழா தினம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது. அத்தோடு அரச ஏற்பாட்டில் வருடா வருடம் தேசிய மீலாதுன் நபி விழா கொண்டாடப்படுவதும் இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் இவ்வருட தேசிய மீலாதுன் நபி விழாவை பேருவளையில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடாத்தத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமான விடயமாகும்.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் இந்நாட்டு முஸ்லிம்களின் கேந்திர கல்வி நிலையமாகும். மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரின் சிந்தனையில் உருவான இக்கலாபீடம் தலைசிறந்த புத்திஜீவிகளை சமூகத்திற்கும் நாட்டுக்கும் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது.இம்மகோன்னத பணிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே இந்த வாய்ப்பைக் கருதலாம்.

பேருவளை வரலாற்றுக் காலம் முதல் சிறப்புற்று விளங்கி வருவது போன்று அச்சிறப்பும் புகழும் பலவாறும் தொடர்ந்து வண்ணமுள்ளன.

இலங்கையின் முதலாவது பள்ளிவாசலாக பேருவைள மஸ்ஜிதுல் அப்ரார் விளங்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று இலங்கையின் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரி பேருவளை, மருதானையில் பாஸியத்துந் நஸ்ரியா என்ற பெயரில் அமைந்திருக்கின்றது.

இதேபோன்று ஆன்மீகத் துறையிலும் பேருவளை சிறப்புடன் விளங்குகிறது.குறிப்பாக கெச்சிமலை தர்ஹா அமைந்துள்ள பள்ளிவாசல், வரலாற்று புகழ்மிக்க பைத்துல் முபாரக் புகாரி தக்கியாவும் பேருவளையில் தான் அமையப் பெற்றுள்ளன.இலங்கையில் எந்த ஊரிலும் இல்லாதவாறு இங்கு மூன்று வழிபாட்டுத்தலங்களில் புனித புகாரி கிரந்தம் பாராயண மஜ்லிஸும் இடம்பெறுகிறது.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மற்றொரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இக்ராஃ தொழில் பயிற்சி நிறுவனமும் இங்குதான் அமையப்பெற்றுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இரத்தினக்கல் வர்த்தக சந்தையும் சீனன்கோட்டையில் 'பத்த' என்ற இடத்தில் அமைந்துள்ளன. இதன் ஊடாக பேருவளை சர்வதேச மட்டத்தில் பேசப்படும் இடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.இதே போன்று பேருவைள மீன்பிடித் துறைமுகமும் கடற்கரை பிராந்தியத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.இவை அனைத்தும் இப்பகுதி மக்களின் பிரதான ஜீவனோபாயத் தொழில்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை விடவும் இதர வர்த்தகத் துறைகளிலும் இப்பகுதி மக்கள் முன்னணியில் திகழ்கிறார்கள்.

சர்வதேசம் வரையிலும் பேரும் புகழும் பெற்ற கொடை வள்ளல்களுக்கும் இப்பகுதி பஞ்சமில்லை எனக் கூறும் அளவுக்கு பல கொடை வள்ளல்கள் வாழ்ந்தும் வாழ்ந்து கொண்டுமிருப்பதும் இப்பகுதிக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு அருட்கொடையாகும்.

பிரதான தரீக்காக்களின் ஷேஹ்மார்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், நாட்டின் நற்பெயரை அலங்கரிக்கும் அரசியல் பிரமுகர்கள் பலரும் உள்ள ஊராகவும் பேருவளை விளங்குகிறது.

ஷாதுலியா, காதிரியா, அலவியா, காதிரியத்துன் நபவியா ஆகிய பிரதான தரீக்காக்களின் முக்கியஸ்தர்களும் இங்கு ஏராளமாக உள்ளனர். அத்துடன் சகல தரீக்காக்களையும் பின்பற்றுவோரும் பரஸ்பரம் ஒற்றுமையாகவும் ஆத்மீக விடயங்களில் ஒத்துழைப்புடன் செயலாற்றுவோராகவும் இருப்பது முன்மாதிரியாகக் காணப்படுகிறது. இதேபோன்றுதான் இங்கு பௌத்த, கிறிஸ்தவ, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள போதிலும் இன, மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதும் அன்றைய மன்னர்கள் காலத்திலிருந்தே நிலவிவரும் மனிதாபிமானப் பண்பாகும்.

பன்மைத்துவமிக்க இத்தகைய இடத்தை தேசிய மீலாதுன் நபி விழாவை நடாத்த அரசு தேர்ந்தெடுத்தமைக்காக புத்தசாசன, சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷான்த்த டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் உட்பட திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு இப்பெரும் கைங்கரியத்தை மேற்கொள்ள முன்வந்த ஜாமிஆ நளீமிய்யா கலாபீட உயர் மட்டத்தினருக்கும் அதன் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டியவர்களாவர்.

தேசிய மீலாதுன் நபி விழா வரலாற்றுப் புகழ்மிக்க ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடைபெறுவதை முன்னிட்டு கலாபீடத்தை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தபால் திணைக்களத்தினால் முதல் நாள் முத்திரை ஒன்றும் வெளியிட ஏற்பாடாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பீ.எம். முக்தார்...

(பேருவளை விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...