ஆளும் கட்சி எதிர்க்கட்சியிடையே சபைக்குள் நேற்று கடும் சர்ச்சை

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தின்படி, 22 ஆவது திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதம் நேற்று நடைபெறவில்லை. எனினும் இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் சபையில் நேற்று கடும் சர்ச்சை ஏற்பட்டது.

22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் நேற்று (06) சபையில் நடைபெறுவதாக முன்னர்  தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், எற்கனவே பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்தில் விவாதம் எடுக்கப்படமாட்டாதென தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, 22 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கவில்லையென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன சபையில் நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்த்தரப்பு எம்பிக்கள் சிலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முன்னர், முதலில் ஆளும் கட்சியின் ஒருமித்த கருத்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள் என சபையில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 22ஆவது திருத்தம் மேலும் ஒரு 20ஆவது திருத்தமாக மாறிவிடக்கூடாதென்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரையையடுத்தே, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பின்னர் அது பெரும் சர்ச்சையாக மாறியது.

இதன்போது ஒரு தரப்பினரது நோக்கத்துக்காக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டம் சமர்பிக்கப்படவில்லை. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருதரப்பினர் தற்போது புதிய யோசனைகளை முன்வைத்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போதாவது கண்களைத் திறந்து, அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.இல்லாவிடின் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்களென அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

22ஆவது திருத்தச்சட்ட மூலத்தை விவாதத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க கவனம் செலுத்தப்பட்டது.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...