உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா

மேற்குலகுடனான நேரடி  போர் பற்றி ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்க மேலும் 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதில் உயர் நடமாடும் பீரங்கி ரொக்கெட் அமைப்பும் உள்ளடங்குகிறது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்யுடன் கடந்த செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை மீட்க உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இரு போர் முனைகளில் தமது படை வேகமாக முன்னேறி பல டஜன் கிராமங்களை மீட்டிருப்பதாக செலென்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுடன் இணைந்து இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பைடன், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனின் நான்கு பகுதிகளை தனது ஆட்புலத்திற்குள் இணைக்கும் அறிப்பை வெளியிட்ட பின்னர் உக்ரைனுக்கான அமெரிக்காவின் முதல் இராணுவ உதவியாக இது உள்ளது.

அமெரிக்க இராணுவ கையிருப்பில் இருந்து உடன் இந்த ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் இதில் நான்கு துல்லியமான ரொக்கெட் லோஞ்சர்கள், 75,000 சுற்று வெடிபொருட்களுடன் 32 ஹோர்விட்சர்கள், கண்ணிவெடிகள் அடங்குவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மேலும் ஆயுதங்களை வழங்குவது அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவர் அனடோலி அன்டோனோவின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. “இதனை எமது நாட்டின் மூலோபாய நலனுக்கு ஏற்பட்டிருக்கும் உடனடி அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம்” என்று அவர் நேற்று டெலிகிராம் செயலியில் பதிவிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் இந்த இராணுவ தயாரிப்புகளின் விநியோகம், நீடித்த இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை மாத்திரம் ஏற்படுத்தாது அது ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான நேரடிப் போருக்கான அச்சுறுத்தலையும் அதிகரிக்கிறது” என்றும் அவர் எச்சரித்தார்.

ரஷ்ய ஆட்புலத்தை பாதுகாப்பதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அண்மைக் காலத்தில் சூசகமாக எச்சரிக்கை விடுத்து வருகிறார். உக்ரைனுக்கு 1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்குவது பற்றிய அறிவிப்பை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் புதிய அறிவித்தல் மூலம் போர் ஆரம்பித்தது தொடக்கம் அமெரிக்கா உக்ரைனுக்கு 16.8 பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...