நாட்டின் உள் விவகாரங்களில் ஐ.நா.தேவையற்ற தலையீடு

ஐ.நாவில் மேற்குலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்தாலும் நாட்டின் இறைமை மற்றும் அரசியலமைப்பை எந்த வகையிலும்காட்டிக்கொடுக்க மாட்டோமெனவும் உறுதிபடத் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பகிரங்க குற்றச்சாட்டு

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்று தெரிவித்தார்..

இலங்கையில் பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரமே என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கற்றுக் கொடுக்கும் நிபுணத்துவம் ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவைக்கு இல்லையென்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். எனினும், பொருளாதார சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவே என்று அவர் தெரிவித்துள்ளார்,

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலிருந்து சூம் தொழில் நுட்பம் ஊடாக விசேட செய்தியாளர் மாநாட்டை அமைச்சர் அலி சப்ரி நேற்று இலங்கை நேரப்படி 11 மணியளவில் நடத்தினார். இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

இலங்கை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் கடன் மறுசீரமைப்பு நிபுணர்களுடன் இணைந்து பொருளாதார சீர்திருத்தங்களுக்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை தமது நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடிய அவர், அது இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகள் எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் நாட்டின் இறைமை மற்றும் அரசியலமைப்பை எவ்வகையிலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லையென இலங்கை வலியுறுத்தியது. சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில்அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகள், இலங்கை தொடர்பான பிரேரணையொன்றை முன்வைத்துள்ளன. இந்தப் பிரேரணையில் இலங்கைக்குப் பாதகமான சரத்துகள் காணப்படுவதனால் அதனை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எந்தவொரு நிலையிலும் நாட்டை காட்டிக் கொடுப்பதில்லை என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள பிரேரணை, இலங்கையின் அரசியலமைப்பை மீறியிருக்கும் அதேநேரம் எமது இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள பிரேரணையை நிராகரிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை என்ன செய்தாலும் சில புலம்பெயர் அமைப்புகள் திருப்தியடையாதென்றும், அவர்கள் தனித்தனி அரசியல் குழுக்களாக செயற்பட்டு அவர்களின் அரசியல் பலத்தை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “ஜெனீவா மாநாட்டில் பலம் வாய்ந்த நாடுகள் ஒன்றுகூடி இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ளன. இலங்கை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பான தீர்மானங்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பதில் வழங்க முயற்சித்த போதும் அதில் சில நாடுகள் திருப்தியடையவில்லை. 2009 ஆம்ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள்12,194 பேருக்கு இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியது .அவர்கள் பொருளாதார உதவிகளையே கேட்டனர். நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காகசுமார் 25,000 இராணுவ வீரர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களுடன் சுமார் 1000 இந்திய இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இராணுவம் பயன்படுத்தி வந்த 94 சதவீதமான நிலங்கள் மீண்டும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா தலைமையிலான மேற்குலக நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் இதில் திருப்தியடையாமல் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி எமது நாட்டுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். இவ்வருட 51 ஆவது அமர்வுக்கு இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரேரணை தொடர்பில் மாநாட்டில் எத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டாலும் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக நாம் செயற்படமாட்டோம். இந்தப் பிரேரணைகளில் இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரான பல விடயங்கலுள்ளன. அதனடிப்படையில் அதிலுள்ள 08 ஆம் சரத்துடன் உடன்பட முடியாது. நாங்கள் அதனை முழுமையாக எதிர்க்கின்றோம். இலங்கையின் இராணுவ வீரர்கள் எந்த நாட்டுக்கும் செல்லமுடியாத வகையில் இப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. யுத்தம் தொடர்பில் எமது நாட்டுக்கு எதிராக மற்ற நாடுகள் சட்ட நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. எமது இராணுவ வீரர்களை இலக்கு வைத்தே அவர்கள் இவ்வாறான பிரேரணைகளை கொண்டுவந்துள்ளனர். இந்தப் பிரேரணையின் ஊடாக எமது இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தவோ வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்து வவே நேரிடும். ஆனால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன . அதில் 38 நாடுகள் அண்மையில் இலங்கைக்காக குரல் கொடுத்திருந்தன. எனினும் அந்த நாடுகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இருப்பினும் அவர்கள் அனைவரும் இணைந்து எமக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். மேற்கத்தேய நாடுகள் அரசியல் ரீதியாக மிகவும் பலம்வாய்ந்தவை இது எமது அரசாங்கத்துக்கு எதிரானதோ அல்லது எமது அரச தலைவருக்கு எதிரானதோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல்,ஆட்சியில் யார் இருந்தாலும் இவ் விடயத்துக்கு எதிராக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்கக் கூடிய விடயம். இதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவருகிறோம். பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட்டது. யாராவது எமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதற்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்படுமென்பது எமக்குத் தெரியும். பொருளாதாரம் தொடர்பில் செயற்படும் அதிகாரம் சர்வதேச நாணயநிதியத்திடமே உள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொருளாதார நிபுணர்கள் இல்லை. அதனால் தான் இப்பிரேரணைகளுக்கு நாம் கொள்கையளவில் எதிரானவர்களாக இருக்கின்றோம். இப்படியே தொடர்ந்தால் நாளடைவில் கிரிக்கெட் விவகாரங்கள் தொடர்பிலும் ஜெனீவாவில் பேசப்படும். இதனால் இந்தப் பிரேரணையை நாம் எதிர்க்கின்றோம். இவை தொடர்பில் நாம் தூதரக மட்டத்திலும் பேச்சு நடத்தியுள்ளோம். இவ்விடயம் தொடர்பில் அரச மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. எமக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருக்கும் நாடுகளிடம் சென்று இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே, கடந்த தடவையுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாக்குகளின் எண்ணிக்கை குறைவடையலாம். பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதனால் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை துரிதமாக முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம். இத்தகைய பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கத்தால் முடியும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு என்பவற்றின் அறிக்கைகளும் இதுதொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. இந்தப் பொறிமுறையினூடாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தரப்பினருக்கும் கூட தங்களை விடுவித்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.


Add new comment

Or log in with...