புதிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியா

- சாதகமான பங்காளி வியட்நாம் என்கிறது  வர்த்தகக் கூட்டமைப்பு

கொவிட் 19 பெருந்தொற்றின் விளைவுகளைச் சமாளிக்கவென புதிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சஞ்சய பாரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வியட்நாம் பிளஸுக்கு குறிப்பிடுகையில், இந்தியாவின் முயற்சிக்கு வியட்நாம் நல்ல சாதகமான பங்காளியாக விளங்குகிறது. இரு நாடுகளும் இணைந்து புதிய விநியோகச் சங்கிலிகளை நிறுவுவதில் இணைந்து செயற்பட முடியும், அதன் ஊடாக தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான இந்திய ஏற்றுமதிகளை கூட்டு முயற்சிகள் மூலம் மேற்கொள்ள முடியும்.  விநியோகச் சங்கிலிகளை நிறுவவென இரு நாடுகளும் ஒத்துழைப்பதற்கான பாரிய ஆற்றலையும் கொண்டுள்ளன' என்று கூறியுள்ளார்.

அதேநேரம் கொவிட் 19 தொற்று இரு நாடுகளதும் பொருளாதாரத்தை மாத்திரமல்லாமல் பிராந்திய மற்றும் உலகலாவிய விநியோகச் சங்கிலிகளிலும் இத்தொற்று இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், கடந்த வருட இறுதியில் புதுடில்லியில் நடைபெற்ற வியட்நாம் - இந்திய வர்த்தக மன்றத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான மனித வளப் பயிற்சி, எண்ணெய் மற்றும் எரிவாயு செயலாக்கம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இருநாடுகளும் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சார்த்திட்டுள்ளமையையும் குறிப்பிடத்தவறவில்லை. 

இதேவேளை இந்திய ஆய்வாளரான ஜெகநாத் பண்டா, தென்கிழக்காசிய மற்றும் இந்திய விநியோக சங்கிலி வலையமைப்பில் வியட்நாம் ஒர் முக்கிய நாடு என்றுள்ளார்.

கடந்தாண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது முதன் முறையாக 13 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டிய வளர்ச்சியாக அமைந்திருந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...