தமிழகத்தின் தூத்துக்குடியில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்

- 2025 இல் 5 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார நாடாக இந்தியா

தமிழகத்தின் தூத்துக்குடியில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவற்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்த இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும்  கப்பல்துறை மத்திய அமைச்சர் ஆயுஸ் சர்பானந்தா சோனாவால், 2025  ஆம் ஆண்டுக்குள் 05 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதார நாடு என்ற இலக்கை அடைவதற்கு உதவும் தளபாடச் செலவுகளைக் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா முன்னெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரூ. 2.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் துறைமுகத் திட்டங்கள், இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து முறைமை உள்ளிட்ட ரூ. 231.21 கோடி பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் இவ்வைபவத்தின் போது அங்குரார்ப்பணம் செய்து மக்களிடம் கையளித்தார். 

அத்தோடு  துறைமுகம் சார்ந்த தொழில்களின் முன்னேற்றத்திற்காக 1300 ஏக்கர் பரப்பளவில் கடலோர தொழில்வாய்ப்பு பிரிவு, வி.ஒ சிதம்பரனார் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், ஒருங்கிணைந்த மருத்துவம் என்பவற்றுக்கு அடிக்கல் நட்டிய அமைச்சர், மருத்துவ ஒட்சிசன் ஜெனரேட்டர் தொகுதியையும் பசுமை துறைமுகத் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார். 

அமைச்சர் சர்பானந்தா சோனாவால் இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்நாட்டு முறைமைகளில் நாம்  முன்னேற்றமடைய வேண்டும். அப்போது வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளை நம்பியிருக்கும் நிலை நீங்கிவிடும். 

வி.ஒ சிதம்பரனார் துறைமுகம் 2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டிலுள்ள பாரிய துறைமுகங்கள் அனைத்தையும் விட 60 வீதம் புதுப்பிக்கத்தக்க சக்தியில் இயங்கக்கூடியதாக இருக்கும். இத்துறைமுகத்தை இந்தியாவின் கிழக்கு கரையோரத்தின் ஏற்றி இறக்கும் மையமாக மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்தும் இருக்கின்றார்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

இவ்வைபவங்களில் பங்குபற்றிய அமைச்சர், துறைமுகத்தின் செயல்பாடுகளையும், வசதிகளையும் அதன் எதிர்கால விரிவாக்க திட்டங்களையும் ஆய்வு செய்தார். துறைமுகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால திறன் மேம்பாட்டு முயற்சிகள், துறைமுகத்தின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்வதற்கான ஏனைய திட்டங்கள் என்பன குறித்து தலைவர் டி.கே. ராமச்சந்திரன் அமைச்சருக்கு எடுத்துக்கூறியுள்ளார் என ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...