மண்சரிவு அச்சுறுத்தல் பிரதேசங்களில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்!

நாட்டில் சீரற்ற காலநிலையுடன் மழை பெய்யும் போது சில பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதும் இன்னும் சில பிரதேசங்களில் நுளம்புகள் நோய்கள் தீவிரமடைவதும் அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் தாழ்நிலங்களில் வெள்ளநிலை ஏற்படுவதும் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படுவதும் கடந்த சில தசாப்தங்களாக வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மலையகப் பிரதேசங்களில் பெய்து வரும் மழை காரணமாக சில பிரதேசங்களில் சிறுசிறு மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனமும் சீரற்ற காலநிலையுடன் மழை பெய்து வருவதால் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன.

அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பகுதிகளில் வாழும் மக்கள் முன்னவதானத்துடனும் விழிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் மக்களைக் கேட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் ஹட்டன் பிரதேசத்தில் கடந்த 03 ஆம் திகதி பெய்த மழையின் காரணமாக பத்தனை, மவுண்ட்வேர்னன் மேற்பிரிவு தோட்டத்திலுள்ள தனிக்குடியிருப்பு ஒன்றுக்கு பின்புறமாக காணப்பட்ட பாரிய மண்மேடொன்று திடீரென காலை வேளையில் சரிந்து குறித்த குடியிருப்பின் கூரை மீது விழுந்துள்ளது.

இச்சமயம் அக்குடியிருப்பின் சமையலறையில் தம் மகளுடன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ராமசாமி காளியம்மாள் என்ற 46 வயது மதிக்கத்தக்க பெண்மணியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பிரதேசத்தில் பதற்றநிலையை ஏற்படுத்தியது.

இவ்வாறான அனர்த்த நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில்தான் சீரற்ற காலநிலை நிலவும் போது விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இவ்விதமான கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தாதவர்களும், என்னதான் அச்சுறுத்தல் என்றாலும் தம் பாரம்பரிய வாழிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர விரும்பாதவர்களும் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

மனிதனின் தவறானதும் பிழையானதுமான செயற்பாடுகளும் வேறு சில காரணங்களும் தான் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதனை தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களை தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அடையாளப்படுத்தி அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு ஏற்கனவே அறிவித்தும் இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு பிரதேச செயலகங்கள் ஊடாக பிரதேசவாசிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறான சூழலில், பத்தனை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரழப்பு ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தி, மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

'மலையகத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் சுமார் 3000 வீடுகள் உள்ளன. அவ்வாறான இடங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான காணிகளை வழங்குமாறும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.

உண்மையில் இது காலத்திற்கு அவசியமான கோரிக்கை. மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்குமுறையாக முன்னெடுக்கப்படுவது அவசியம். அது மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, 'இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் விரைந்து செயற்படும்' என உறுதியளித்துள்ளார்.

எனினும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குவதும் சீரற்ற காலநிலையுடன் மழை பெய்யும் போது மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுவதும் இன்றியமையாததாகும். அதன் ஊடாக துரதிர்ஷ்டகரமான அனர்த்தங்களைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...