உலகக் கிண்ண இந்திய அணியில் பும்ரா இல்லை

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக, எதிர்வரும் டி20 உலகக் கிண்ண போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இது, அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் போட்டியில் இந்தியாவுக்கான மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனத் தெரிகிறது.

பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும், தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓய்வு மற்றும் சிகிச்சைக்காக அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்குச் சென்றுள்ளார். பும்ரா பங்கேற்க முடியாமல் போனதை அடுத்து, முன்னதாகவே பதில் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்த தீபக் சஹர், முகமது ஷமி ஆகியோரில் ஒருவர் தற்போது பிரதான அணியில் இணைய இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, முழங்கால் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாமல் போன நிலையில், தற்போது பும்ராவும் விலகியிருப்பது உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


Add new comment

Or log in with...