ரி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர் பரிசு

- நவம்பர் 13 ஆரம்பமாகும் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை 5.6 மில். டொலர்

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண போட்டியின் பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் அறிவித்துள்ளது. இதன்படி உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை தட்டிச் செல்லும்.

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெல்லும் அணி பரிசுத் தொகையாக 1.6 மில்லியன் டொலர்களை வெல்லும் அதே நேரம் இறுதிப் போட்டியில் தோல்வியுறும் அணி அந்த எண்ணிக்கை அளவில் பாதித் தொகையை கைப்பற்றும்.

16 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம் சுமார் ஒரு மாத காலம் நீடிக்கவிருப்பதோடு, இதன் அரையிறுதியில் தோற்கும் அணிகள் தலா 400,000 டொலர்களை வெல்லும். உலகக் கிண்ணத்தில் வழங்கப்படும் மொத்தப் பரிசுத் தொகை 5.6 மில்லியன் டொலர்களாகும்.

சுப்பர் 12 சுற்றில் வெளியேறும் எட்டு அணிகளும் தலா 70,000 டொலர்களை வெல்லும். கடந்த ஆண்டு நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத்தைப் போன்றே, சுப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிகள் 40,000 டொலர் பரிசை வெல்லும்.

சுப்பர் 12 சுற்றுக்கு ஆப்கான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய எட்டு நாடுகளும் நேரடியாக தகுதி பெறுகின்றன.

மற்றைய எட்டு அணிகளாக நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே ஆகியன இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்றில் ஆடும். முதல் சுற்றில் வெற்றிகளை பெறும் அணிகளுக்கு 40,000 டொலர் பரிசு வழங்கப்படும்.

இந்த ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறும் நான்கு அணிகளுக்கும் தலா 40,000 டொலர்கள் வழங்கப்படும்.

ஐ.சி.சி ரி20 உலகக்கிண்ணத் தொடர் ஒக்டோபர் 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இலங்கை – நமீபியா அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன.


Add new comment

Or log in with...