வரலாற்று ஆளுமைமிக்க சான்றோர்கள் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும்

அஷ்ஷெய்க் எச். உமர்தீனின் 35 வருட சேவை நலன் பாராட்டு விழாவில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி

நாட்டில் வாழும் வரலாற்று ஆளுமைமிக்க சான்றோர்கள் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும். அதற்குரிய மன எண்ணங்களும் உள பக்குவமும், தூய்மைத் தன்மையும் அவர்களிடத்தில் அமைந்திருத்தல் அவசியமாகும் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீனின் கடந்த 35 வருட கால சேவையைப் பாராட்டி கண்டியில் நடைபெற்ற மாபெரும் சேவை நலன் பாராட்டு விழா கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர் குழு, கல்லூரியின் பழைய மாணவர் குழு மற்றும் அதிபர், கண்டி சிட்டி ஜம்மிய்யதுல் உலமா, கண்டி சிட்டி மஸ்ஜித் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி ஜனாஸா நலன்புரிச் சங்கம், கண்டி மலே பள்ளிவாசல் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய்க் ஏ. சி. எம். ஜிப்ரி ஹஸ்ரத், கௌரவ அதிதியாக பாகிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,..

சில விடயங்களை உரிய நேரத்தில் செய்யத் தவறினால் பின்னர், நாங்கள் கவலை கொள்வோம். அந்த வகையில் மௌலவி உமர்தீனுக்கு அவருடைய 35 வருட சேவை நலன் பாராட்டு விழா எடுப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும்.இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து கண்டி முஸ்லிம் சிவில், சமூக அமைப்பினர்களுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

நாம் ஒருவரைப் பாராட்டும் போது அவரது உள்ளத்தில் ஒரு பேணுதல் இருத்தல் வேண்டும். உளப்பக்குவம் இருத்தல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை நல்லது சொல்லி புகழ்ந்திருக்கிறார்கள். மனிதர்களுடைய சிறப்பை புகழ்ந்துள்ளார்கள். அதே போன்று யார் தன்னுடைய மனப்பக்குவத்தை இழந்து விடுவாரோ அவர்களைப் புகழத்தேவையில்லை. யார் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருக்கிறாரோ அவரைப் பாராட்டலாம். வாழ்த்தலாம். ஒருவர் பிறருக்காக அவர் ஆற்றிய பணிக்காக நிச்சயமாக நல்லமுறையில் பாராட்டப்பட வேண்டும். வாழ்த்தப்பட வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். இவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயம் ஒன்றாகும்.

அந்த வகையில் மௌலவி உமர்தீன் அவர்களிடம் நல்ல பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் நான் காண்பது என்னவென்றால் எதையும் துணிச்சலாகச் செய்யக் கூடியவர். அவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அந்த பொறுப்பை துரிதமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற தன்மை இருக்கிறது. அவர் அதற்காக காலம், நேரம் பாராமல் செயற்பட்டு பொறுப்பை நிறைவேற்றிக் கொடுப்பதில் மிகுந்த திறன்மிக்கவர். இதுதான் நான் அவரிடம் முதலில் காணுகின்ற சிறப்பம்சம்.

நாம் அனைவரும் அல்லாஹ்வின் அழைப்பின் பக்கம் கவனத்தை கொண்டிருத்தல் வேண்டும். மார்க்க அறிவை மதித்து நடத்தல் நடத்தல் வேண்டும். அதில் பிறரையும் ஈடுபடுத்தல் வேண்டும். வணக்க வழிபாட்டில் ஈடுபடுதல், கட்டுப்படுதல், அறிவைத் தேடிப் படித்தல், நல்ல கிரியைகளில் ஈடுபடுதல் குறிப்பாக சமூக சேவைப் பணிகள் போன்ற விடயங்களில் ஈடுபடுதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் மிக அத்தியாவசியமானதாகும்

நான் ஜம்மிய்யதுல் உலமாவில் இணைந்து கொண்ட காலம் முதல் சுமார் 14 வருடங்கள் நாங்கள் இருவரும் நல்ல பல விடயங்களை செய்துள்ளோம். பள்ளிவாசல் என்னும் போது உலமாக்கள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் மௌலவி உமர்தீன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து எந்த நேரமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இறைபணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் என்பதை தெளிவாகச் சொல்ல முடியும்.

மார்க்க ரீதியாகவும் ஷரியத் ரீதியாகவும் அவரை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக பொது மக்களும் வர்த்தகர்களும் ஏனைய அனைத்து தரப்பினர்களும் மௌலவி உமர்தீன் அவர்களிடத்தில் நல்ல விடயங்களை எடுத்துச் செயற்பட வேண்டும் என்ற மனப்பதிவு எல்லோருக்கும் வருதல் வேண்டும். யாராக இருந்தாலும் இப்படி சமூகப் பணியை செய்தால் அல்லாஹ்தஆலா மகத்தான வெற்றியைத் தருவான்.

ஒரு மனிதனின் முயற்சி முன்னேற்றத்திற்கு காரணமாக அமைவது தியாகம் ஆகும். தனக்கு மேலுள்ளவர்கள், பொறுப்பானவர்கள் சில பொறுப்புக்களை வழங்கும் போது தியாக அர்ப்பணிப்போடு அந்த காரியத்தில் ஈடுபடுதல் வேண்டும். அதற்கு காலம் நேரம் சந்தர்ப்பம் எவற்றையும் பார்க்கக் கூடாது. அதில் தான் வெற்றியும் தங்கியுள்ளது. இந்தப் பின்னணியில் மௌலவி உமர்தீன் தான் கற்றுக் கொண்ட ஒழுக்க மாண்புகளை பின்பற்றி எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு 'வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் என்பது இந்தக் காலத்தின் கட்டாயத் தேவை'. ஜம்மிய்யதுல் உலமா சபையின் குரலை நாடெங்கும் ஒங்கி ஒலிக்க வைப்பதற்கு அவர் ஒரு முக்கியமான நபராக இருந்திருக்கிறார் என்பதை நாம் மறந்து விட முடியாது. இவர் பல சந்தர்ப்பங்களில் இதற்காக நாடு முழுக்க சென்று கடுமையாக உழைத்தவர்.

தனக்கு மேலுள்ளவர்களை கண்ணியப்படுத்துதல் அவசியமாகும். மனிதர்கள் மனிதர்களுடைய ஈடேற்றத்திற்கு நல்ல பணிகள் புரிந்தால் அவை அவர்களுடைய வெற்றிக்கு வழிகோலும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனவே இன்று நாங்கள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒரு சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டினுடைய எதிர்காலத்திற்கும், சுபிட்சத்திற்கும் பங்களிப்புக்களை நல்க வேண்டும் என்பதோடு முஸ்லிம்களுடைய வெற்றிக்கும் பாதுகாப்புக்கும் அல்லாஹ்தஆலா நல்லருள் புரிய வேண்டும் என்று நாம் எல்லோரும் துஆச் செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருந்து இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒருவர் பாராட்டப்பட வேண்டும் அவருடைய வாழ்க்கையின் சிறப்புக்கள் அவர் செய்த பணிகள் வெளிக்கொணரப்பட வேண்டும். இது நல்லதொரு எடுத்துக்காட்டான ஒரு பாராட்டு விழாவாகும் என்றார்.

அஷ்ஷெய்க் ஏ. சி. எம். ஜிப்ரி ஹஸ்ரத் உரையாற்றும் போது,..

மௌலவி உமர்தீன் என்னுடைய மாணவன். அவர் அரபுக் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் சுறுசுறுப்பாக துடிப்போடு செயற்பட்டவர். அக்கல்லூரியில் அப்போது முதன் முதலாக கிணறொன்று தோண்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் அதில் உற்சாகமாக நின்று பணிபுரிந்தார். அவர் என்னுடைய விருபத்திற்குரிய மாணவனாக விளங்கினார்.

அவர் செய்துள்ள பணிகள் ஒன்று இரண்டு அல்ல மட்டிட முடியாத சேவைகள் உள. மார்க்கக் கல்வியின் மேல் ஆர்வமும் ஆற்றலும் உள்ள மாணவன். இவர் உயர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு அரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் பல நூல்களையும் எழுதியுள்ளார். இவர் மாணவ, மாணவிகளுடைய மார்க்க கல்வி வளர்ச்சிக்காக பெரும் சேவையாற்றியுள்ளார். இவர் இன்னும் மென்மேலும் பல சமூகப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்றார்.

பாகிஸ்தான் வதிவிடப் பிரதி அப்சல் மரைக்கார்

மௌலவி உமர்தீன், இலங்கை முஸ்லிம் சமூகப் பரப்பிலும் சர்வ சமய செயற்பாடு நடவடிக்கைகளிலும் குறிப்பாக கண்டி முஸ்லிம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர்.ஒரு பள்ளிவாசலின் பிரதான இமாம், சிறந்த மார்க்கச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், அரபுக் கல்லூரிகளின் அனுபவமிக்க அதிபர், அனைத்திற்கும் மேலாக ஒரு சமூகப் பணியாளர். ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் என இவரைப் பற்றி நிறைய சொல்லலாம். கல்விக்கு உதவி செய்பவர் எவரும் மரணம் எய்துவதில்லை. அவர் இஸ்லாமிய மார்க்கக் கல்வி மேம்பாட்டுக்காக அரும்பணிகள் ஆற்றியுள்ளார்.

இந்நிகழ்வில் அல் புர்க்கானிய்யாவின் உப அதிபர் மௌலவி ராயிஸ் முப்தி வரவேற்புரையையும் அல் புர்க்கானிய்யாவின் உப அதிபர் மௌலவி ராபி சிறப்புரையினையும், ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மௌலவி பஸ்லுர்ரஹ்மான் மௌலவி உமர்தீனின் வாழ்க்கை பற்றிய அறிமுகவுரையை ஆற்றினார். அரபுக் கல்லூரி மாணவர்களின் வாழ்த்துப் பாடல்களும் மௌலவி உமர்தீன் ஏற்புரை நன்றியுரை வழங்கிதோடு பல முக்கிய நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றது.அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீனுக்கு பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவித்தன,

இந்நிகழ்வில் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். எச். சலீம்டீன், அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர், ஆசிரியர் குழு, கல்லூரியின் பழைய மாணவர் குழு மற்றும் அதிபர் மற்றும் கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி பி. எம். பாயிஸ், கண்டி சிட்டி மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். சித்தீக்,ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மௌலவி பஸ்லுர் ரஹ்மான், கண்டி மலே பள்ளிவாசலின் தலைவர் பி. எம். அனூர்தீன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள். பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் என பெரு எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

- இக்பால் அலி


Add new comment

Or log in with...