கடலரிப்பை தடுக்க நிரந்தர வேலைத்திட்டம்

நிந்தவூர் கடலரிப்பு விவகாரத்திற்கு தீர்வு

பணிப்பாளர் நாயகம் நேரடி விஜயம் செய்து அறிவிப்பு

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவக்க, (28) மாலை நிந்தவூருக்கு விஜயம் செய்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல் சுலைமாலெவ்வையின் அழைப்பையேற்றே, அவர் அங்கு சென்றார்.

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் தொடர் கடலரிப்பு, இதனால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிடல், கடலரிப்பைத் தடுப்பதற்கான தடுப்புச்சுவரை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காகவும் பணிப்பாளர் அங்கு விஜயம் செய்தார்.

நிந்தவூர் பிரதேச கடற்கரைப் பகுதி, கடந்த பல வருடங்களாக கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் இது உக்கிரமடைந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடல் அரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், கடலரிப்புக்கு நிரந்தர தீர்வைப்

பெறுவதற்கும்,நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோர் கடும் முயற்சி எடுத்தனர்.

இதையடுத்தே, பணிப்பாளர் நாயகம் இங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இங்கு கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.எஸ். ரணவக்க ;

இலங்கையில் எந்த ஊரிலும் ஏற்படாத கடலரிப்பை, நிந்தவூரில் அவதானித்தேன்.இக்கடல் அரிப்பால் பிரதேச மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.இந்த விஜயத்தில் இதை அவதானிக்க முடிந்தது. இந்தப்பிரச்சினைக்கு நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இந்த விஜயத்தின் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், உப தவிசாளர் வை.எல் சுலைமாலெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.எம். அன்சார், சட்டத்தரணி ரியாஸ் ஆதம், ஏ.அஸ்வர், கே.எம். ஜாரிஸ், ஏ.எம். ரபீக், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம். மஜீத், எம். வாஹிட் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எம்.துளசிதாசன், நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டு கழகத்தின் தலைவரும், சமூகவியலாளருமான எம்.சி.எம். றிபாய் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...