கண்டிக்கு புதிய சொகுசு கடுகதி ரயில் சேவை; வார இறுதியில் இடம்பெறும்

- ஒக்டோபர் 01 முதல் ஆரம்பம்
- முதல் வகுப்பு ரூ. 2,000; 2ஆம் வகுப்பு ரூ. 1,500
- நேர விபரம் வெளியீடு

கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் விசேட சொகுசு கடுகதி புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வெகுசன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெகுசன ஊடக அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல், வார இறுதியில் இப்புகையிரத சேவை இடம்பெறும். 

அந்த வகையில் இச்சேவையானது,

  • மு.ப. 6.30 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு மு.ப. 9.18 மணிக்கு கண்டியை சென்றடையவுள்ளது.
  • பி.ப. 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.

அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்புதிய ரயில்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

முதல் வகுப்பு ஆசன கட்டணம் ரூ. 2,000, 2ஆம் வகுப்பு ஆசன கட்டணம் ரூ. 1,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடவும், கண்டி நகரை சுற்றி பார்க்க வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், இந்த புகையிரதம் பயனுள்ளதாக அமையுமென தெரிவித்த அமைச்சர், இந்த சேவை ஆடம்பரமான, நம்பகமான, பாதுகாப்பான சேவையை வழங்குமென சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அநுராதபுரம் புனித யாத்திரை செல்லும் மக்களுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கான புதிய விசேட புகையிரத சேவையொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...