புலம்பெயர் தொழிலாளருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

'மனுசவிய' திட்டம் நேற்று அமைச்சர் மனுஷவினால் ஆரம்பித்து வைப்பு
எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காது நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஒன்றிணையுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதியத்  திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

'மனுஷவிய' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி ஓய்வூதியத் திட்டம் நேற்றைய தினம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்து  உரையாற்றிய அமைச்சர்,

எமது எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காமல் மக்கள் எதிர்கொண்டநெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவே நாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

எமது நடவடிக்கைகளால் நாட்டில் நிலவிய நெருக்கடிகளுக்கு ஓரளவாயினும் தீர்வு காண முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு வெளிநாடுகளில் பணிபுரிவோரின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 18வயதிற்கும் 59வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கே இந்த புதிய ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் இந்த காப்புறுதி திட்டத்திற்குள் உள்ளடங்குகின்றனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர்,

எமது எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காமல் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே அரசாங்கத்தில் இணைந்துகொண்டோம்.

எமது முயற்சியால் ஓரளவுக்கேனும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முடியுமாக உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அதற்காகவே அவர்களுக்கு ஓய்வூதியத் திட்ட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

வெளிநாடுகளில் தொழில்புரிந்துவருபவர்களின் ஓய்வுபெறும் காலத்தை வலுப்படுத்துவதற்காகவே இந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

டொலர் கையிருப்பு இல்லாததால் அந்நிய செலாவணி குறைவடைந்து எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முடியாத நிலை காணப்பட்டது.

இதனால் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியது. எரிபொருட்களுக்காக நாட்கணக்கில் வரிசையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஒருசிலர் வரிசையில் இருந்து நோய்வாய்ப்பட்டு மரணிக்கவும் நேர்ந்தது.

அத்துடன் இந்த பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கறுப்புச்சந்தை முதலாளிமார் அதிகரித்தனர்.

பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துச் சென்றது.

மக்கள் எதிர்கொண்ட துன்பமான நிலையை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே மனிதாபிமான அடிப்படையில், எமது எதிர்கால அரசியலையும் கருத்திற்கொள்ளாது  அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தீர்மானித்தோம்.

எமது இந்த தீர்மானத்தை பலரும் விமர்சிக்கலாம். ஆனால் நாம் அரசியலுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. மக்களின் நிலைமையை அறிந்து மனிதாபிமான அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொண்டோம் என்றும் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...