மூத்த ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உபதலைவருமான முஹம்மத் ஆரிப் முஹம்மத் நிலாம் இன்று அகவை 77இல் பிரவேசிக்கிறார். 'ஈழத்து நூன்' என்ற புனைபெயருடன் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர், 1977 முதல் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் தொடர்ச்சியாக 55 வருடங்கள் ஊடகத்துறையில் சாதனை புரிந்து வருகிறார்.
ஊடகவியலாளர் நிலாமுக்கு இலங்கையின் பிரதான மூன்று பத்திரிகைகளில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. இவருடைய வாழ்வில் இதுவும் ஒரு சாதனையே. 1977ஆம் ஆண்டு தினகரனின் கொழும்பு தெற்கு செய்தியாளராக தன் ஊடகப் பணியை ஆரம்பித்து, பின்பு குருநாகல் மாவட்ட நிருபராக பணிபுரிந்தார். 1983ஆம் ஆண்டு முதல் முழுநேரப் பத்திரிகையாளராக வீரகேசரியில் பத்து வருடங்கள் பணிபுரிந்த இவர், பின் 1983 இல் தினக்குரலில் இணைந்து உதவி ஆசிரியர், பிரதம உதவி ஆசிரியர் பதவிகளை 19 வருடங்களாக வகித்தார்.
அதன் பின் 2022 வரை லேக்ஹவுஸ் தினகரன் தமிழ் பிரசுரங்களில் ஆலோசகராகப் பணிபுரிந்து முழுநேரப் பத்திரிகைத்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்பும் அடிக்கடி தினகரன் உட்பட பல பத்திரிகைகளுக்கு அரசியல் மற்றும் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார்.
1946-.09.-22ஆம் திகதி நிலாம், மர்ஹூம் முஹம்மத் ஆரீப் மற்றும் ஹாஜியானி ஹபிலா உம்மாவின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை நீர்கொழும்பு போலவத்தை ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்றார். அதன் பின்னர் தனது சொந்த ஊரான கல்லொழுவை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இணைந்து உயர் வகுப்பு வரை கற்றார்.
சவுதி அரேபிய தூதுவராலயத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்த வேண்டுகோளையடுத்து அதன் அங்கத்தவர் பத்துப் பேருக்கு வழங்கிய புலமைப் பரிசில் பெற்று ரியாத் நகரின் இமாம் பின் முஹம்மத் சவூதி இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 2004 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையில் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
நிலாம் தமிழைப் போன்று சிங்கள அறிவிலும் புலமை மிக்கவராக இருக்கிறார். அவர் பணிபுரிந்த தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அவருடைய சேவை அத்தியாவசியமாகிறது. சிங்கள அரசியல் தலைவர்களது உரைகளை தமிழ் மக்களுக்கு வழங்குவது இவரது பிரதான பணியாக இருந்தது. புத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான தலைப்புச் செய்திகள் நிலாம் பெயரிலேயே வந்தமை இவரது திறமையை உறுதிப்படுத்துகின்றது.
நிலாமின் பத்திரிகைத்துறை பணிகள் ஆறு தசாப்தத்தைக் கடந்துள்ளது. சாதாரண ஒரு பிரதேச நிருபராக இருந்து ஆலோசகராக வருவதற்கு அவரிடம் காணப்பட்ட திறமையும், கடின உழைப்புமே காரணமாகும். பத்திரிகைளில் மாலை நேரமே புதிய செய்திகளைப் பெறுவதற்கான நேரமாகும். தான் பணிபுரிந்த பத்திரிகைகளுக்கு அவ்வாறான செய்திகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நிலாம் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார். மினுவாங்கொடை கல்லொலுவையிலே நிலாமின் வீடு இருந்தது. அநேகமான சந்தர்ப்பங்களில் கொழும்பிலிருந்து மினுவாங்கொடைக்குச் செல்லும் கடைசி பஸ் வண்டியிலேயே இவர் பயணிப்பார். அவரிடம் சேவை அர்ப்பணிப்பு இருந்ததற்கு இது சிறந்த உதாரணமாகும்.
நிலாமின் ஊடகத்துறை மற்றும் இலக்கிய பங்களிப்புக்காக பல விருதுகளை அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார். 2009ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதினை கலாசார அமைச்சு அவருக்கு வழங்கியது. 2015 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக் கொண்டார். 2004 இல் இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒன்றியம் சிறந்த பத்திரிகையாளர் விருதினை வழங்கி கௌரவித்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மூத்த ஊடகவியலாளர் விருதினை வழங்கி கௌரவித்தது. இதுதவிர இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் இவரது இலக்கிய, ஊடகப் பணிக்கு பல கௌரவங்கள் வழங்கப்பட்டன.
இவர் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக 2002 ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த வேளையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த போது அவரது ஊடகக் குழுவில் இணைந்ததைக் கூறுகின்றார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது தமிழ் ஊடகவியலாளர் நிலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், நேபாளம், சவுதி அரேபியா உட்பட பல உலக நாடுகளுக்கு ஊடகவியலாளராக விஜயம் செய்த அனுபவங்களை அவர் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவரான இவர் அதன் பொதுச் செயலாளர், உபதலைவர், தேசிய அமைப்பாளர் பதவிகளை வகித்துள்ளார். அதன் 27 வருட வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஒருவர் அவராவார்.
தனது கிராமமான கல்லொலுவையின் வளர்ச்சிக்குக் குறிப்பாக கல்வித்துறை மேம்பாட்டுக்காக நிறைந்த பங்களிப்பினைச் செய்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் அறிஞர்கள் மற்றும் கலைஞர்களை கல்லொலுவைக்கு அழைத்துச் செல்வதில் கூடுதலான கரிசனை காட்டியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ் அறிஞர்களான கவிஞர் சாரண பாஸ்கரன், சிராஜூல் மில்லத், ஏ.கே. அப்துல் சமத், தோப்பில் மீரான் டாத்தோ முஹம்மத் இக்பால், ஹிமானா செய்யத், நாகூர் ஈ.எம்.ஹனீபா, காயல்ஷேக் முஹம்மத் போன்ற பிரபலங்களை தனது சொந்த மண்ணுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவர் பல சமூக இலக்கிய அமைப்புக்களிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் செயற்குழு உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்த இவர் நீர்கொழும்பு கலை இலக்கிய வட்டம், இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டம், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் இலங்கைக் கிளை ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
பல நூல்களை எழுதியுள்ள இவரது அண்மித்த படைப்பான 'தட்டுத் தாவாரம்' என்ற கவிதை நூல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீனின் தலைமையில் கொழும்பில் வெளியிடப்பட்டது.
இருமுறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய இவர், கல்லொழுவையில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது ஒரு மகன் சில வருடங்களுக்கு முன்னர் காலமானார். தனது ஓய்வு காலத்தில் தனது கிராமப் பள்ளிவாசல் மற்றும் பாடசாலையின் வளர்ச்சிக்காக பூரண பங்களிப்பினைச் செய்து வருகிறார்.
அகவை 77 இல் பிரவேசித்துள்ள மூத்த ஊடகவியலாளர் நிலாமை வாழ்த்துவதோடு மேலும் பல வருடங்கள் அவர் ஆரோக்கியமாக வாழப் பிரார்த்திப்போம். தனது பதினெட்டு வயதிலிருந்து இன்று வரை தனது பேனாவுக்கு ஓய்வு கொடுக்காது எழுதி வரும் நிலாமின் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகிறோம்.
என்.எம். அமீன்...
Add new comment