மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

- பாராளுமன்றத்தில் கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்பு

கடற்றொழிலுக்குத் தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்கமைய மீனவர்கள் நாளாந்தம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (21) நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், நன்னீர் மீன்பிடியை மேம்படுத்தும் நோக்கில் இவ்வருட இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட 4,000 குளங்களில் மீன் குஞ்சுகளை இடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கைக் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், கடற்றொழில் துறைசார் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரியை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சிறுவர் தினத்துடன் இணைந்ததாக ஆரம்பிக்கவிருப்பதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதனைவிடவும், 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகளுக்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு 24ஆம் திகதிய 2255/22ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கு அமைய கடற்றொழில் சார்பான கட்டண விதிப்புக்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. பெறுமதி சேர்க்கப்பட்ட கடற்றொழில் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்தல், காட்சிப்படுத்தல், இறக்குமதி ஏற்றுமதி செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளன. அத்துடன், மீள்பதப்படுத்தல், மீன் உற்பத்தி மற்றும் கடற்றொழிலுடன் இணைந்த சாதனங்களுக்கான இறுக்குமதிக் கட்டணங்கள், புதிய படகு நிர்மாணம் போன்றவற்றுக்கான கட்டணங்கள் என்பனவும் இதன் மூலம் மறுசீரமைக்கப்படவுள்ளன.

அதேநேரம், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதிய 2277/04ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிக்கு அமைய நீல நீந்தும் நண்டுகள் பாதுகாக்கப்படவுள்ளன.

இன்றைய கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரகொடி, சார்ள்ஸ் நிர்மலநாதன், வீரசுமண வீரசிங்ஹ, சஞ்ஜீவ எதிரிமான்ன, சிந்தக அமல் மாயாதுன்ன, ஹேஷா விதானகே, டீ.வீரசிங்ஹ, (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, ரஜிகா விக்ரமசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர். 


Add new comment

Or log in with...