துறைமுகங்களில் பெண் பாரந்தூக்கி இயக்குபவர்களை நியமிக்க நடவடிக்கை

- அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் வகிபாகத்தை விஸ்தரிக்க பணிப்புரை

உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போன்று இந்நாட்டு துறைமுகங்களிலும் பெண் பாரந்தூக்கி இயக்குபவர்களாக நியமிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை உட்பட அமைச்சின் கீழ் காணப்படும் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகளை விஸ்தரித்து, வினைத்திறனை அதிகரிக்குமாறு துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா நேற்று (20) பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

உலகின் பல நாடுகளில் காணப்படுவதைப் போன்று பாரந்தூக்கி இயக்குனர்களாகப் பெண்களை நியமிப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான முதலாவது கூட்டம் நேற்று (20) நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 22ஆம் திகதி அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2010ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிக்கும் குழு இணக்கம் தெரிவித்தது. 2018ஆம் ஆண்டு யூலை 03ஆம் திகதிய 2078/22ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட சிவில் விமான சேவைகள் (ஊழியர் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும்) ஒழுங்குவிதிகளில் காணப்படும் அச்சுப் பிழையை சரி செய்வது இதன் நோக்கமாகும்.

(வரையறுக்கப்பட்ட) ஜயா கொள்கலன் முனைய நிறுவனம், சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் அந்தந்த நிறுவனங்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, பிரமித்த பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) சரத் வீரசேகர, எம்.எஸ்.தௌபீக் பைசல் ஹாசிம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
 


Add new comment

Or log in with...