- செய்திகள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் விளக்கம்
இந்தியாவிடமிருந்து எந்தவொரு மேலதிக நிதி உதவியும் இல்லை என்ற செய்திகள் தொடர்பாக ஊடகங்களின் கேள்விகளுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலய ஊடகப் பேச்சாளர் பதிலளித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகள் குறித்து நாம் அறிந்துள்ளோம். இலங்கை மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை முறியடிப்பதற்காக முன்னொருபோதுமில்லாதவகையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு உதவியினை இந்தியா வழங்கியுள்ளது என்பதனை நாம் தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம். அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு துரிதமான ஆதரவை வழங்கிவரும் ஏனைய இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளர்களுடனும், இலங்கைக்கான ஆதரவுக்காக இந்தியா பேச்ச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு தொடர்பாகவும் நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அத்துடன் இவ்விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தகட்ட அனுமதியானது, இலங்கையின் கடன் உறுதிப்பாட்டிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கையிலுள்ள முக்கிய பொருளாதாரத் துறைகளில் இந்திய தரப்பினரிடமிருந்து நீண்டகால முதலீட்டினை ஊக்குவித்தல், உள்ளிட்ட சாத்தியமான சகல வழிகளிலும் நாம் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவினை வழங்குவோம்.
இதற்கு மேலதிகமாக கிட்டத்தட்ட 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் எமது இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், உயர் கல்விக்காகவும் திறன் விருத்திக்காகவும் இலங்கையர்கள் பலர் முன்னணி இந்திய நிறுவனங்களின் புலமைப்பரிசில்களை தொடர்ந்து பெற்றவண்ணம் உள்ளனர். இலங்கையுடனான எமது நெருங்கிய மற்றும் நீண்டகால ஒத்துழைப்பின் அடிப்படையிலான இந்த அம்சங்களும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்குகின்றன.
Add new comment