- நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிப்பு
கடந்த செப்டெம்பர் 07ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்துடன் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் (12) கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகேவிடம் அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திலெடுத்த நீதவான், அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதற்கமைய அவரை ரூ. 5 இலட்சம் கொண்ட தலா 2 சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், அவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கும் உத்தரவையும் வழங்கினார்.
ஆர்ப்பாட்டமொன்றில் பங்குபற்றிய அவர், பொல்துவ சந்தியில் வைத்து கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவினரால் கடந்த செப்டெம்பர் 07ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறையில் இருந்த வேளையில், தாம் உரிய சுகாதார வசதிகளின்றி இருந்ததாகவும், பழுதடைந்த பொருட்களுடனான உணவுகளை உட்கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்திருந்ததாக, அவரை பார்வையிடச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் சிறைச்சாலைக்குள் 200 பெண்கள் ஒரேயொரு கழிப்பறையை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment