ஜனாதிபதி ரணில் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்

- மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் ஜனாதிபதியும் கலந்து கொள்வார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்து மகாராணியின் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக  உறுயளித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று (11) முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) வரவேற்றார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய ஜனாதிபதி, 7 தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார்.

எதிர்வரும் 19ஆம் திகதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள உள்ளார்.

மறைந்த எலிசபெத் மகாராணிக்காக செப்டெம்பர் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அன்றையதினம் வரை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமெனவும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை மேற்கொண்டு வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 70 ஆண்டு ஆட்சிக்குப் பின்னர், 96ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை (08) காலமானார்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை சகல இராஜ மரியாதைகளுடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...