கைதான செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் காலி முகத்திடல் கோட்டா கோ கம உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான ‘அரகலய’ போராட்ட செயற்பாட்டாளருமான லஹிரு வீரசேகர கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் இன்றையதினம் (10) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை தலா ரூ. 2 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இன்று (10) முற்பகல் அவர் நீதிமன்ற மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (09) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றிலும், காலி முகத்திடலில் ‘அரகலய’ எதிர்ப்பு போராட்த்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய நிகழ்விலும் கலுந்து கொண்டு திரும்பும் வேளையில் கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸ் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) முன்னாள் அழைப்பாளரான லஹிரு வீரசேகர, அரசாங்கத்திற்கு எதிரான காலி முகத்திடல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராவார்.


Add new comment

Or log in with...