பிரிட்டனின் புதிய அமைச்சரவையில் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளராக (Secretary of State for Environment, Food and Rural Affairs) இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தனவை நியமிக்க புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ரணில் ஜயவர்தன அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதன் மூலம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்தின் முதலாவது அமைச்சரவை அமைச்சராக ரணில் ஜயவர்தன இடம்பிடிக்கவுள்ளார்.
லிஸ் ட்ரஸ் வெளியுறவு செயலாளராக வருவதற்கு முன்னர், ரணில் ஜயவர்தன பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் 2020 மே முதல் 2022 செப்டெம்பர் வரை சர்வதேச வர்த்தகத்திற்கான அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் லிஸ் ட்ரஸின் வெற்றிக்காக ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்த ரணில் ஜயவர்தன, 2015ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலாக பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
2015 இல் இடம்பெற்ற தேர்தலில் வடகிழக்கு ஹம்ப்ஷயர் பாராளுமன்ற உறுப்பிரான ஜோர்ஜ் யூஸ்டிஸின் (George Eustice) இடத்திற்கு ரணில் ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
தொழில் ரீதியாக வங்கியாளரான ரணில் ஜயவர்தன அந்நாட்டின் லொயிட்ஸ் வங்கியில் பணியாற்றி வந்ததோடு, ஹம்ப்ஷயர் கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.
ரணில் ஜயவர்தன மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
Add new comment