பசில் ராஜபக்‌ஷவின் பயணத்தடை நீக்கம்

- 2023 ஜனவரி 15 வரை வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு 2023 ஜனவரி 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக பசில் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டு நீடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பசில் ராஜபக்‌ஷ அடுத்த வாரம் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காகவும், சில தனிப்பட்ட விடயங்களை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் இவ்வனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு இன்று (02) ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதிகள் குழாம் இவ்வுத்தரவை வழங்கியது.

நாடு தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளமைக்கு பிரதிவாதிகள் பின்பற்றிய விவேகமற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோரினால் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டொக்டர் டபிள்யூ.டி லக்ஷ்மன் உள்ளிட்ட 39 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...