08 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்று உத்தரவு
கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் உரிமையாளாரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதுடன் அவரை 25,000 ரூபா சரீரப் பிணயில் விடுவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சில வைத்தியர்கள் விருந்துபசாரம் ஒன்றுக்காக கோழி பிரியாணியை இந்த ஹோட்டலில் ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்பதற்காக திறந்தபோது ஒருவரின் உணவுப் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக உரிமையாளரை மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்தார்.
மட்டக்களப்பு குறூப், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்
Add new comment