குறைந்த வருமான வீட்டுத் திட்டங்களில் 22,308 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை

- உறுதிப்பத்திரப் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளுக்கு ஒரு மாத அவகாசம்
- ஒரு வருடத்திற்குள் உறுதிப்பத்திரங்களை வழங்கி முடிக்கவும் ஆலோசனை

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினால் வீடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் தீர்த்து நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பில் தேவைப்படின் கட்டளைச்சட்டங்களை திருத்துமாறு அறிவுறுத்தினார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற (23) கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை வீட்டுரிமைக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத வீட்டு உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில், அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவது துரிதப்படுத்தப்படுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை உறுதிப்பத்திரம் பெறாத அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வீட்டு பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக 11 பேர் கொண்ட குழுவையும் ஜனாதிபதியின் செயலாளர் நியமித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டோருக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயற்படுத்தும் முக்கிய நிறுவனங்களாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள  நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன காணப்படுகின்றன.

இந்த மூன்று நிறுவனங்களாலும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 32,933 ஆகும். இதில் இதுவரை 10,625 வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டுமே உரிமைக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டிய உறுதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 22,308 என இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 1,326 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 545 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 14,607 ஆகும். அந்த வீடுகளில் சுமார் 12,000 குடும்பங்கள் குடியேறியுள்ளன. இதில் சுமார் 80 பேருக்கே உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறித்த வீடுகள், கூட்டு ஆதனம் என்பதால், அதற்கான அனுமதி கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் இதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இங்கு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன, சுமார் 8 வருடங்களாக கூட்டு ஆதனம் தொடர்பான சட்ட மூலத்தை திருத்துவதற்கான  முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். அதற்காக  நீதி அமைச்சு மூலம் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது செயலிழந்துள்ளதாகவும்  அதன் தலைவர் மேலும் தெரிவித்தார். நீதி அமைச்சோடு  கலந்துரையாடல்களை துரிதப்படுத்தி சட்ட மூலத்தை  திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு  அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக தெரிவிக்கையில், அதிகார சபையின் கீழ் 108 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். இதில் 17,000 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 10,000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பும் நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீடொன்றைப் பெற்ற ஒருவருக்கு அந்த வீட்டின் உறுதிப்பத்திரத்தை வழங்குவது உரிய நிறுவனத்தின் பொறுப்பாகுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு வலியுறுத்தினார். நிறுவன மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உள்ளக முறைமையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதற்கு அவசியமான கொள்கை முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்திய அமைச்சர், உறுதிப்பத்திரம் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். எனவே எதிர்வரும் ஒரு வருடத்திற்குள் அனைவருக்கும் உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, மேலதிக செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க, கூட்டு ஆதன  முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர, நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விஜயானந்த ஹேரத், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஜே. ஜனாக உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...