இன்று முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு சுற்றுநிருபம்

அனைத்து அரச ஊழியர்களும் இன்று (24) முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை மூலம் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஜூலை 24ஆம் திகதி வெளியிடப்பட்ட பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு (EST-6/03/LEA/1060) அமைய, அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதில் உள்ள சிரமங்களை கருத்திற்கு கொண்டு ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காலப் பகுதி இன்றுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து அரச ஊழியர்களையும் இன்று (24) கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, இதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளிப்பது தொடர்பான சுற்றறிக்கை (ஜூன் 15 - EST-6/03/LEA/1060) வெளியிடப்பட்டு அது பின்னர் இம்மாத ஆரம்பத்தில் இரத்துச் செய்யப்பட்டது.

அத்துடன் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி முடியுமான அளவில் வீட்டிலிருந்து பணிக்கு அமர்த்துவது தொடர்பான சுற்றறிக்கைகள் (ஜூன் 17 - EST-6/03/LEA/1060), (ஜூன் 26 - EST-6/03/LEA/1060) வெளியிடப்பட்டிருந்ததோடு, குறித்த விடயம் பின்னர் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சுற்றறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

PDF File: 

Add new comment

Or log in with...